

கரூர்: முதல்வர் விஜய் ஜூலை 2-வது வாரத்தில் கரூர் வருகை தரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களைச் சந்திக்க ஏற்பாடு செய்யபட்டுள்ளது.
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தவெக சார்பில் தலா ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை விஜய் சந்தித்து ஆறுதல் கூறி நிதி உதவி அளிக்க திட்டமிட்ட நிலையில், பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் அவர் கரூர் வர முடியவில்லை எனக் கூறப்பட்டதால் அந்த நிகழ்வு நடைபெறவில்லை இதையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மாமல்லபுரம் வரவழைத்து, ஆறுதல் கூறி நிவாரண உதவி வழங்கினார்.
இதனிடையே, கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததைத் தொடர்ந்து, கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை முதல்வர் விஜய் சந்திக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், முதல்வர் விஜய் ஜூலை 2-வது வாரத்தில் கரூர் வரவுள்ளதாகவும், அப்போது, கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை சந்திக்க உள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன.
இதுகுறித்து தவெக நிர்வாகிகளிடம் கேட்டபோது, “முதல்வர் விஜய் ஜூலை 2-வது வாரத்தில் கரூர் வர உள்ளதாக தகவல் வந்துள்ளது. அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கிறாரா அல்லது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்கிறாரா என்பது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
மேலும் திருச்சியில் நடைபெற்றநன்றி தெரிவிப்புக் கூட்டம் போல் கரூரில் மக்கள் மத்தியில் முதல்வர் விஜய் பேசவுள்ளதாகவும் இதேபோல் மாநிலம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாக முதல்வர் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிகிறது” என்றனர். தற்போது கரூர் தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், முதல்வர் விஜய் கரூர் வரும்போது தனது ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது.