

சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கத்தை முதல்வர் விஜய் செப்டம்பர் 17-ம் தேதி தொடங்கி வைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ‘காலை உணவுத் திட்டத்தை’ அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் 2021 செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கி வைத்தார்.
அதன்பின் இத்திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் தவெக ஆட்சி மாற்றத்துக்குபின் இத்திட்டத்தின் பெயர் ‘பெருந்தலைவர் காமராசர் காலை உணவுத் திட்டம்’ என்று மாற்றப்பட்டதுடன், எட்டாம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதற்காக ரூ.268 கோடி நிதியும் நடப்பு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில் பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17-ம் தேதி காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை, முதல்வர் விஜய் தொடங்கி வைக்கவுள்ளார்.
விருதுநகரில் உள்ள முன்னாள் முதல்வர் காமராசர் படித்த கே.வி.எஸ் நடுநிலைப் பள்ளியில் இத்திட்ட விரிவாக்கத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதல்வராக பொறுப்பேற்ற பின்பு முதல்முறையாக தென் மாவட்டத்துக்கு விஜய் செல்வது குறிப்பிடத்தக்கது.