

வேலூர்: கூட்டுறவு சங்க தேர்தல் தேதியை விரைவில் முதல்வர் அறிவிப்பார். அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று கூட்டுறவு துறை அமைச்சர் காந்திராஜ் தெரிவித்தார். வேலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அமைச்சர் காந்திராஜ், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கூட்டுறவுத் துறையில் உள்ள இடர்பாடுகளை களைய துறை ரீதியான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம். கூட்டுறவு அங்காடிகளில் மக்களுக்கு குறைந்த விலையில் சன்னரக அரிசி விற்பனை செய்யப்படுகிறது. ரேஷன் அரிசியை பாலீஷ் செய்து சன்னரக அரிசியாக கொடுக்கவில்லை. அதுபோன்று வரும் தகவல்கள் தவறானது. தமிழகத்தில் கூட்டுறவு சங்கத் தேர்தல் தேதியை விரைவில் முதல்வர் அறிவிப்பார்.
அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கு புதிய கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. இருக்கின்ற சட்ட திட்டங்களின்படியே தேர்தல் நடைபெறும். கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கூட்டுறவுத் துறையில் உள்ள காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.