

புதுடெல்லி: ஓசூர், கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய நகரங்களின் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்திட தேவையான மெட்ரோ ரயில் திட்டங்களைச் செயல்படுத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்திடுமாறு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த முதல்வர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தன் பின், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை முதல்வர் விஜய் சந்தித்தார்.
அப்போது, விரைவான வளர்ச்சியைப் பெற்றுவரும் மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. இத்தகைய வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கும் வகையில், முக்கிய உட்கட்டமைப்புத் திட்டங்களில் முதலீடு செய்வது இன்றியமையாதது என்பதால், தமிழகத்தின் வளர்ச்சிக்குத் தேவையான துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், ரயில்வே திட்டங்கள், தொழில் வழித்தடங்கள் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளித்து நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டுமென்று முதல்வர் விஜய் கேட்டுக்கொண்டார்.
தமிழகத்தின் வலுவான கல்விச் சூழலை மேலும் வலுப்படுத்த, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களை (Institutes of National Importance) தமிழகத்தில் நிறுவிடவும், தமிழகத்தின் பொருளாதாரத்திலும், தொழில் வளர்ச்சியிலும் முக்கியப் பங்காற்றி வரும் ஓசூர், கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய நகரங்களின் பொதுப் போக்குவரத்தினை மேம்படுத்திடத் தேவையான மெட்ரோ ரயில் திட்டங்களைச் செயல்படுத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்திடுமாறும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் முதல்வர் விஜய் கேட்டுக்கொண்டார்.