

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை டெல்லியில், தமிழக முதல்வர் விஜய் நேற்று சந்தித்துப் பேசினார்.
சென்னை: கோவை, மதுரை மற்றும் ஓசூரில் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு தேவையான நிதியை ஒதுக்க மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் முதல்வர் விஜய் கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழக முதல்வர் விஜய் 2 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். நேற்று அவர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது தமிழகத்தின் நலன்சார்ந்து நிலுவை நிதி ஒதுக்கீடு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.
அதன்படி தமிழகத்தின் வளர்ச்சிக்கு தேவையான துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், ரயில்வே திட்டங்கள், தொழில் வழித்தடங்கள் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்து நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென முதல்வர் விஜய் வலியுறுத்தினார்.
அதேபோல், தமிழகத்தின் வலுவான கல்விச்சூழலை வலுப்படுத்த தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களை நிறுவவேண்டும். மாநிலத்தின் பொருளாதாரத்திலும், தொழில் வளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றி வரும் ஓசூர், கோயம்புத்தூர் மற்றும் மதுரை நகரங்களின் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்திட தேவையான மெட்ரோ ரயில் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யுமாறும் மத்திய அமைச்சரை முதல்வர் விஜய் கேட்டுக்கொண்டதாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.