

சென்னை: ‘மின்சாரத் துறையை கடனில் தள்ளிக் கொண்டு வருகிறீர்கள். இப்போது போக்குவரத்துத் துறையை கடனில் தள்ளுகிறீர்கள். விமர்சனம் செய்தால் சிறையில் தள்ளுகிறீர்கள். ஒட்டுமொத்த தமிழகத்தையும் படுகுழியில் தள்ளுகிறீர்கள்’ என முதல்வர் விஜய்யை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘ஒரு மக்கள் நலத் திட்டத்தை செயல்படுத்தும்போது, அந்தத் திட்டத்தால் சமூகத்திலும், அரசின் நிதிநிலையிலும் ஏற்படும் சாதக பாதகங்களை முன்கூட்டியே ஆய்வு செய்ய வேண்டும். அதற்கான நிதி ஆதாரத்தை உறுதி செய்யாமல் திட்டங்களை விரிவுபடுத்துவது, இறுதியில் அதன் சுமையை ஒட்டுமொத்த மக்களின் தலையிலும் சுமத்தும் நிலையை உருவாக்கிவிடும்.
தமிழ்நாட்டின் மின்சாரத் துறையின் நிதிச்சுமை குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஏற்கனவே தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறது. குறிப்பாக, உச்சநேர மின்தேவையை சமாளிக்க தனியாரிடமிருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35 முதல் ₹37 வரை விலைக்கு வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக மின்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்தும் நாம் ஏற்கனவே அறிக்கை வெளியிட்டுள்ளோம்.
இப்போது அரசு போக்குவரத்துக் கழகங்களின் நிலைமையும் கவலைக்குரியதாக உள்ளது. தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறை கொள்கைக் குறிப்பின்படி, அரசு போக்குவரத்துக் கழகங்களின் தினசரி வருவாய் ரூ.47.89 கோடியாகவும், தினசரி செலவு ரூ. 70.15 கோடியாகவும் உள்ளது. அதாவது, ஏற்கனவே நாளொன்றுக்கு ரூ.22.26 கோடி பற்றாக்குறை நிலவுகிறது. 2025–26ஆம் ஆண்டில் மாத சராசரி இழப்பு ரூ.393.76 கோடியாக இருந்துள்ளது. இந்த நிலையில், மகளிரின் கட்டணமில்லாப் பயணத் திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டு, ஆண்டுக்கு சுமார் ரூ.6,000 கோடி செலவாகும் என அரசு அறிவித்துள்ளது.
ஏற்கெனவே மின்சாரத் துறையை கடனில் தள்ளிக் கொண்டு வருகிறீர்கள். இப்போது போக்குவரத்துத் துறையை கடனில் தள்ளுகிறீர்கள். விமர்சனம் செய்தால் சிறையில் தள்ளுகிறீர்கள். ஒட்டுமொத்த தமிழகத்தையும் படுகுழியில் தள்ளுகிறீர்கள்.
மகளிருக்கு கட்டணமில்லாப் பயணம் வழங்கும் திட்டம் தொடர வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், அந்தத் திட்டத்திற்கான முழு நிதிச்சுமையையும் அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏற்கனவே நிதிநெருக்கடியில் இருக்கும் போக்குவரத்துக் கழகங்களின் தலையில் மேலும் சுமையை ஏற்றிவிட்டு, அவற்றின் செயல்பாட்டை பலவீனப்படுத்தக் கூடாது.
ஏற்கெனவே நாளொன்றுக்கு ரூ.22.26 கோடி பற்றாக்குறையில் இயங்கும் போக்குவரத்துக் கழகங்களுக்கு, விரிவுபடுத்தப்பட்ட மகளிர் கட்டணமில்லாப் பயணத் திட்டத்தின் முழு நிதியையும் அரசு வழங்குமா? இந்த நிதிச் சுமை யார் தலையில் விழும்? ஆண்டுக்கு சுமார் ரூ. 6,000 கோடி செலவாகும் என அறிவிக்கப்பட்டுள்ள திட்டத்திற்கான முழுமையான நிதி ஆதாரம் இருப்பது எங்கே?
மின்சாரத் துறை மற்றும் போக்குவரத்துத் துறை என அத்தியாவசிய பொதுத்துறைகளின் நிதிச்சுமை அதிகரித்து வரும் நிலையில், அவற்றை மீட்டெடுப்பதற்கான நீண்டகாலத் திட்டம் அரசிடம் இருக்கிறதா?
மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தும் பெயரில், அந்தத் திட்டங்களின் நிதிச்சுமையை பொதுத்துறைகளின் மீது சுமத்தி, அவற்றை மேலும் கடன் மற்றும் இழப்புகளுக்குள் தள்ளுவது ஏன்?
மக்கள் நலத்திட்டங்கள் மக்களுக்குப் பயன் தர வேண்டும். அதே நேரத்தில் அவற்றை செயல்படுத்தும் பொதுத்துறைகளும் நிதி ரீதியாக வலுவாக இருக்க வேண்டும். மின்சாரம், போக்குவரத்து போன்ற அத்தியாவசியப் பொதுத் துறைகளை பலவீனப்படுத்திவிட்டு, தமிழகத்தின் பொருளாதார எதிர்காலத்தைப் பாதுகாக்க முடியாது.
எனவே, மகளிர் கட்டணமில்லாப் பயணத் திட்டத்திற்கான முழு நிதியையும் அரசே வழங்குவதுடன், அரசு போக்குவரத்துக் கழகங்களின் நிதிநிலையை பாதுகாக்கவும், மின்சாரத் துறையின் நிதிச்சுமையை குறைக்கவும் வெளிப்படையான நீண்டகாலத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.’ எனத் தெரிவித்துள்ளார்.