

சென்னை புழல் மத்திய சிறையில் முதல்வர் விஜய் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அருகில் சிறைத் துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்
சென்னை: புழல் மத்திய சிறையில் முதல்வர் விஜய் நேற்று ஆய்வு மேற்கொண்டார். கைதிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
நாட்டின் மிகப்பெரிய சிறைவளாகங்களில் ஒன்றான சென்னை புழல் மத்திய சிறைக்கு முதல்வர் விஜய் நேற்று காலை வந்து ஆய்வு மேற்கொண்டார். மத்திய சிறை-1ல் அமைந்துள்ள தொற்றுத் தடை காப்புப் பகுதி, பார்வையாளர் அறை, போதை ஒழிப்பு மறுவாழ்வு மையம் ஆகியவற்றைப் பார்வையிட்டு, கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்தார்.
வளாகத்தில் உள்ள நவீன மருத்துவமனையைப் பார்வையிட்டு, கைதிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். சிறை வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சமுதாயக் கல்லூரியின் வகுப்பறைகள், நூலகம், மேம்பட்ட கணினி பயிற்சி மையங்களைப் பார்வையிட்டார். தூக்குமேடை பகுதிகளையும் சென்று பார்த்தார்.
பின்னர், கைதிகள் தொழிற்கூடத்துக்குச் சென்றார். விசைத்தறிக் கூடத்தில் நெய்யப்பட்ட போர்வைகளைப் பார்த்தார். தையல் பிரிவில் உடைகள் தைக்கப்படும் முறைகளையும் பார்வையிட்டு, கைதிகளின் தையல் திறனைப் பாராட்டினார்.
கைதிகளுக்கு வழங்கப்படும் உணவை சாப்பிட்டுப் பார்த்து, சமையல் அறையின் தூய்மை, உணவின் தரத்தை தொடர்ந்து நன்கு பராமரிக்குமாறு அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.
கைதிகளை சந்தித்து, தேவைகள், குறைகள் குறித்து கேட்டறிந்தார். அவற்றை உடனே சரிசெய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். “கைதிகளை தண்டிப்பதைவிட, தண்டனைக் காலத்தில் அவர்களை நல்வழிப்படுத்துவதே முதன்மையான நோக்கமாக இருக்க வேண்டும்” என்றும் அறிவுறுத்தினார்.
புழல் காவல் நிலையத்தில் காவல் நிலைய செயல்பாடுகள் குறித்து ஆய்வாளரிடம் கேட்டறிந்த முதல்வர். உடன் காவல் இணை ஆணையர் திஷா மிட்டல்.
பின்னர், சிறையை ஒட்டியுள்ள புழல் காவல் நிலையத்துக்கு சென்று, காவல் நிலைய நடைமுறைகள் குறித்து ஆய்வாளர் வசந்த் ராஜாவிடம் கேட்டறிந்தார். “புகார் கொடுக்க வரும்மக்களிடம் கனிவாக நடக்க வேண்டும். புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார். கணினி அறை, கைதிகள் அடைக்கும் அறையையும் பார்வையிட்டார்.
சிறைத் துறை டிஜிபி சந்தீப்ராய் ரத்தோர், அப்பிரிவின் சென்னை சரக துணைத் தலைவர் பழனி, சிறைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ், காவல் இணை ஆணையர் திஷா மிட்டல்உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.