

சென்னை: சுகாதாரம் மற்றும் உயர்கல்வித் துறைகள் சார்பில் ரூ.262.15 கோடியில் கட்டப்பட்ட கட்டிடங்களை முதல்வர் விஜய் நேற்று காணொலியில் திறந்துவைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சுகாதாரத்துறை சார்பில், கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையை அரசு தலைமை மருத்துவமனையாகத் தரம் உயர்த்தி ரூ.59.04 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் மற்றும் மருத்துவ உபகரணங்கள், கரூர், பள்ளப்பட்டி அரசு மருத்துவமனையில் ரூ.6.37 கோடியில் கட்டப்பட்டுள்ள கூடுதல் மருத்துவக் கட்டிடம், ஈரோடு, சத்தியமங்கலம் அரசு மருத்துவ
மனையில் ரூ.6.18 கோடியில் சீமாங்க் பிரிவுக்கான புதிய கட்டிடம் மற்றும் மருத்துவ உபகரணங்கள், கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் ரூ.3.50 கோடியில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடம் ஆகியவற்றை காணொலியில் முதல்வர் விஜய் நேற்று திறந்து வைத்தார்.
இதுதவிர, ஈரோடு மற்றும் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், பரமத்தி வேலூர், பெரும்புதூர் மற்றும் அரக்கோணம் அரசு மருத்துவமனைகளில் ரூ.135.05 கோடியில் அமைக்கப்பட்டுள்ள தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டிடங்களையும் திறந்து வைத்தார்.
உயர்கல்வித் துறை
உயர்கல்வித் துறை சார்பில், கோயம்புத்தூர், திருப்பூர், தஞ்சாவூரில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரி, அரசு கலைக் கல்லூரிகள் ஆகியவற்றில் ரூ.52.01 கோடியில் கட்டப்பட்டுள்ள ஆண்களுக்கான கூடுதல் தங்கும் விடுதிக் கட்டிடம், கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகங்கள், பன்நோக்கு திறந்தவெளி அரங்கம், உள்விளையாட்டரங்கம் போன்ற பல்வேறு கல்விசார் கட்டிடங்களைத் திறந்து வைத்தார். மேலும், செங்கல்பட்டு மாவட்டம், ஆலந்தூரில் ரூ.22.10 கோடியில் கட்டப்படவுள்ள புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக் கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்வில், அமைச்சர்கள் அருண்ராஜ், விஸ்வநாதன், தலைமைச்செயலர் மு.சாய்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.