

சென்னை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் விஜய் நிவாரணத் தொகை அறிவித்துள்ளார்.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மதுரை மாவட்டம் மேலூர் வட்டம், கொட்டாம்பட்டி அருகே இன்று அதிகாலை சென்னையில் இருந்து மார்த்தாண்டம் நோக்கிச் சென்ற தனியார் பேருந்து, மதுரையில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது மோதிய விபத்தில், பேருந்தில் பயணம் செய்த திருநெல்வேலி, சமாதானபுரத்தைச் சேர்ந்த சிறிய புஷ்பம், இடையமலைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ், திருச்சியைச் சேர்ந்த சூர்யா, திருவாரூர் கூத்தாநல்லூர் பகுதியைச் சேர்ந்த முகமது யாசின், திருநெல்வேலி, திசையன்விளை பகுதியைச் சேர்ந்த ஆபிரகாம், ஆகியோர் விபத்து நடந்த இடத்திலேயும், மதுரை, வஞ்சி நகரத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றியும் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையுமடைந்தேன்.
இவ்விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 7 நபர்களுக்கும், லேசான காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 15 நபர்களுக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.
இவ்விபத்தில் உயிரிழந்த 6 நபர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 7 நபர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 15 நபர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.” என்று முதல்வர் விஜய் கூறியுள்ளார்.