

சென்னை: தவெக பெண் வேட்பாளர் குறித்து உருவக்கேலி செய்ததாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, முதல்வர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தாராபுரத்தில் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து நேற்று முன்தினம் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசும்போது, தவெக வேட்பாளர் சத்திய பாமாவை உருவக்கேலி செய்யும் வகையில் பேசியதாக பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக முதல்வர் விஜய் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவு: தாராபுரத்தில் பரப்புரை பொதுக்கூட்டம் என்ற பெயரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு அநாகரிகக் கூட்டத்தை நடத்தியுள்ளார். தவெக வேட்பாளர் சத்தியபாமா குறித்து, உருவக்கேலி செய்து, மிகவும் அநாகரிகமாகப் பேசி புளகாங்கிதம் அடைந்துள்ளார். திமுக சார்பாக வளர்க்கப்பட்டு வரும் ஆபாசநதியை, வன்மநதியை, வக்கிரநதியை உருவாக்கியதே தான் தான் என்பதை பெருமையுடன் மார்தட்டி ஒப்புதல் வாக்கு மூலமும் கொடுத்திருக்கிறார் மு.க.ஸ்டாலின்.
பெண்களைப் பற்றி ஆபாசமாகப் பேசுவதில், அதிலும் பெண்களை அருகில் வைத்துக்கொண்டே, அவர்கள் அருவருப்பாக உணர்வதைக்கூட கண்டுகொள்ளாமல் பேசுவதில் வல்லவர்களான இந்த கூட்டத்துக்கு தாராபுரம் தொகுதி மக்கள் தக்க பதிலடியை கொடுக்கத்தான் போகிறார்கள். தொடர்ந்து பெண்களை ஆபாசமாகப் பேசி வரும் திமுகவுக்கு தமிழக பெண்களின் மகனாக, அண்ணனாக, தம்பியாக எனது வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தலைவர்கள் கண்டனம்: தவெக வேட்பாளர் சத்தியபாமா குறித்து மு.க.ஸ்டாலின் பேசியதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியிருப்பதாவது:
பாமக எம்எல்ஏ சவுமியா அன்புமணி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பரப்புரையில் எத்தனையோ நல்ல தகவல்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால் கடைசியில் அவர் கூறிய இந்த ஒரு வார்த்தையால் எல்லாம் காணாமல் போய்விட்டது. யாரையும் நாம் உருவக்கேலி செய்யக்கூடாது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம்: மூத்த அரசியல் தலைவர்,முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், தாராபுரம் வேட்பாளர் குறித்து சொல்லியிருப்பது, அவர் வகித்த, வகிக்கும் பொறுப்புக்கு உகந்த செயல் அல்ல.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்: பெண்களை இழிவுபடுத்துவதை எந்த வகையிலும் ஏற்க முடியாது. நாங்கள் அருகில் இருந்தவரை மிகுந்த கண்ணியத்துடன் பேசி வந்தார் மு.க.ஸ்டாலின். நாங்கள் அருகில் இல்லாததாலோ, என்னவோ தடம்புரண்டு பேசுகிறார்.
தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்: நான் பாஜக தலைவராக இருந்தபோது திமுக தொண்டர்கள் அதிகளவில் உருவக்கேலி செய்தனர். ஆனால், இன்றைக்கு மு.க.ஸ்டாலின், உதயநிதி போன்றோர் பேசுவதைக் கேட்டால், இவர்கள்தான் தொண்டர்களுக்கு அப்படி பேச வழிகாட்டியிருக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.