

சென்னை: ”கல்வி, விளையாட்டு, திறன் மேம்பாடு போன்ற ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் இளைஞர்களை ஈடுபடுத்துவதன் மூலமாகவும், கடுமையான சட்ட நடவடிக்கைகள் மற்றும் சமூகத்தின் கூட்டு முயற்சி மூலமாகவும் போதைப் பொருட்களை ஒழித்து, வலிமையான சமுதாயத்தைப் படைக்க முடியும்” என்று சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தில் முதல்வர் விஜய் கூறியுள்ளார்.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ”சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தல் தடுப்பு தினத்தை முன்னிட்டு முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு
அதில் ”இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும், குற்றங்களைத் தடுக்கவும், போதைப் பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கவும், போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகும்.
கல்வி, விளையாட்டு, திறன் மேம்பாடு போன்ற ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் இளைஞர்களை ஈடுபடுத்துவதன் மூலமாகவும், கடுமையான சட்ட நடவடிக்கைகள் மற்றும் சமூகத்தின் கூட்டு முயற்சி மூலமாகவும் போதைப் பொருட்களை ஒழித்து, வலிமையான சமுதாயத்தைப் படைக்க முடியும்.
போதைப் பொருட்கள் தொடர்பான குற்றங்களைத் தடுத்திட தமிழக அரசு எடுத்து வரும் பல்வேறு முன்னெடுப்புகளுக்கு அனைவரும் துணை நின்று, போதைப் பொருள் இல்லாத, பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான தமிழ்நாட்டை உருவாக்கிட இந்நாளில் உறுதியேற்போம். ஸ்டார்ட் Run, ஸ்டாப் Drugs, ஸ்போர்ட்ஸ்-அ எடு, ட்ரக்ஸ்-அ விடு,” என்று முதல்வர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக போதைப் பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற ‘ஸ்டார்ட் Run ஸ்டாப் Drugs’ போதைப் பொருள் எதிர்ப்பு ஓட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்து பங்கேற்றார்.
சென்னை - காமராஜர் சாலையில் இருந்து தொடங்கிய ஓட்டத்தில் முதல்வர் விஜய், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த், மரிய வில்சன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த விழிப்புணர்வு ஓட்டத்தில் அரசு அலுவலர்கள், காவல் துறையினர், விளையாட்டு வீரர்கள், தடகள ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.