

திருவாரூர் பிரச்சாரத்தில் முதல்வர் ஸ்டாலின்
திருவாரூர்: “என்டிஏ கூட்டணியின் தலைமையாக இருக்கும் பாஜகவுக்கு, தமிழ்நாட்டில் நம்மை எதிர்ப்பதற்கு வலிமை இல்லை என்று அதிமுகவை விலைக்கு வாங்கியிருக்கிறது” என்று திருவாரூரில் தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் இன்று திருவாரூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். திருவாரூர் - தெற்கு வீதியில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியது:
“திருவாரூர் என்றால் அது திமுக ஊர். அதனால் நான் இங்கிருந்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறேன். திமுக வேட்பாளர்கள் திருவாரூர் - பூண்டி கே.கலைவாணன், மன்னார்குடி - டி.ஆர்.பி.ராஜா, திருத்துறைப்பூண்டி - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாரிமுத்து, நன்னிலம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் எஸ்டிபிஐ வேட்பாளர் முகமது முபாரக் போட்டியிடுகிறார். இந்த நான்கு பேரையும், உங்களின் குரலாகச் சட்டமன்றத்தில் ஒலிக்க உங்களது பொன்னான வாக்குகளை நீங்கள் வழங்க வேண்டும்.
2021-ல் எங்கள் மீது நீங்கள் நம்பிக்கை வைத்து, ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தீர்கள். முதலமைச்சராக நான் பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்து, பெண்கள், விடியல் பயணத்தில் கட்டணமில்லாமல் பயணிக்கத் தொடங்கிவிட்டீர்களா இல்லையா!?
அதிமுக ஆட்சியில் சீரழிக்கப்பட்ட நிதி நிலைமையை ஓரளவு சரிசெய்தவுடனே, பெண்களுக்கு உரிமைத் தொகையாக ஆயிரம் ரூபாயை ஒரு கோடியே 31 லட்சம் பெண்களுக்கு கொடுக்க தொடங்கிவிட்டோமா இல்லையா? அனைவரின் வங்கிக் கணக்கிற்கும் ஆயிரம் ரூபாய் சரியாக வருகிறதா இல்லையா?
பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் தொடங்கினோம். 19 லட்சம் மாணவர்கள் சத்தான உணவை சாப்பிடுகிறார்கள். நம்முடைய வீட்டுப் பிள்ளைகள் கல்வியில் சிறந்து, தலைசிறந்த வேலைகளில் பணிபுரிய வேண்டும் என்பதற்காக தொடங்கிய திட்டம்தான், ‘நான் முதல்வன் திட்டம்’. அந்தத் திட்டம் இன்றைக்கு ஹிட்டாகி, 48 லட்சம் திறன் சான்றிதழ்களை அவர்கள் வாங்கியிருக்கிறார்கள். இந்தத் திட்டத்தால், எத்தனை ஐஏஎஸ், ஐபிஎஸ் உருவாகியிருக்கிறார்கள் என்று நீங்கள் அனைவரும் செய்திகளில் பார்த்திருப்பீர்கள், படித்திருப்பீர்கள்.
‘புதுமைப்பெண்’ திட்டத்தை உருவாக்கி, மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கினோம். அதன் வெற்றியைப் பார்த்து, மாணவர்களுக்கும் மாதா மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டத்தை உருவாக்கினோம். இப்படி நம்முடைய திராவிட மாடல் அரசின் முத்திரைத் திட்டங்களைப் பற்றி, நானும் பல மேடைகளில் புள்ளிவிவரங்களுடன் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன். இதனால் பயனடையும் மக்களே, ஊடகங்களில் வந்து பேசுகிறார்கள்.
இதன் தொடர்ச்சியாக தான், கடந்த ஜனவரி மாதம் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை, மகிழ்ச்சிப் பொங்கலாக கொண்டாட வேண்டும் என்று மூன்றாயிரம் ரூபாய் வழங்கினோம். டெல்டா பகுதி என்பதால், விவசாயிகள் ஏராளமாக இங்கு வந்திருக்கிறீர்கள். இந்த உழவர் திருநாள் மகிழ்ச்சிப் பொங்கலாக இருந்ததா?
நம்முடைய ஹிட் திட்டங்களில், டிரெண்ட் - செட்டர் என்றால், அது கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்! நம்முடைய தமிழ்நாட்டைப் பார்த்து, பல மாநிலங்களும் உரிமைத் தொகை வழங்க தொடங்கியிருக்கிறார்கள். ஆனால், தேர்தலைக் காரணம்காட்டி இந்த உரிமைத் தொகையை நிறுத்த, ஒன்றியத்தில் இருக்கும் பா.ஜ.க. திட்டம் தீட்டியது! அதனால்தான், பிப்ரவரி மாதமே, மூன்று மாதத்திற்கான உரிமைத் தொகையை முன்பணமாகவும், கோடைக்கால சிறப்பு நிதியாக இரண்டாயிரம் ரூபாயைச் சேர்த்து, ஐந்தாயிரம் ரூபாயை வழங்கியிருக்கிறோம்.
இப்படி அனைத்து வகையிலும் தமிழ்நாடு டாப்பில் இன்றைக்கு வந்திருக்கிறது. இது, பாஜக தலைமையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அதிமுக உள்ளிட்ட அடிமைக் கட்சிகளுக்கு எல்லாம் எரிச்சலை உண்டாக்கியிருக்கிறது. அதனால், தமிழ்நாட்டை எப்படியாவது கலவர பூமியாக்கிவிடலாம் என்று திட்டமிட்டு, ஏராளமான போலிச் செய்திகளைத் தொடர்ந்து பரப்பிப் பார்த்தார்கள். கலவர வெறியுடன் திரிந்த அவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியிருக்கிறது. அவர்கள் பரப்பியது அனைத்துமே அவதூறுதான் என்று உண்மை வெளிப்பட்டு, இன்றைக்கு மக்கள் முன்னால் அசிங்கப்பட்டு நிற்கிறார்கள்.
தமிழ்நாடு இன்று தலைநிமிர்ந்து நிற்கிறது! அந்த பெருமிதத்தோடும் தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கான திட்டங்களோடும்தான், வாக்கு கேட்டு மக்களான உங்களைச் சந்திக்க, உங்கள் ஸ்டாலின் வந்திருக்கிறேன்.
திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைக்கு ‘சூப்பர் ஸ்டார்’ என்று பெயர் சூட்டியிருக்கிறோம். அந்தத் தேர்தல் அறிக்கையை நீங்கள் எல்லாம் தொலைக்காட்சியில், பத்திரிகைகளில் பார்த்தீர்களா... அதெல்லாம் வாக்குறுதிகள் மட்டுமல்ல. திராவிட மாடல் 2.0-வில் நிச்சயம் நிறைவேற்றப்படவுள்ள திட்டங்கள்.
2011-ல் இருந்து, 2021 வரைக்கும், தமிழ்நாட்டைப் பாழாக்கி, தலைகுனிய வைத்த அதிமுக, 2014-ல் இருந்து இந்தியாவை மோசமான நிலைக்கு அழைத்துச் சென்றிருக்கும் பாஜக-விடம் சரணாகதி அடைந்து ஒரு கூட்டணி அமைத்திருக்கிறது. அந்தக் கூட்டணியில், பாஜக கிளைச் செயலாளராக இருக்கிறார், அதிமுக-வை அழிவு பாதையில் அழைத்துச் செல்லும் பழனிசாமி. இப்போது அவர், நம்முடைய தேர்தல் அறிக்கையைப் பார்த்து, புலம்பத் தொடங்கியிருக்கிறார்.
அது என்ன மாதிரியான புலம்பல் என்றால், நம்முடைய திட்டங்களான மகளிர் உரிமைத்தொகை, கனவு இல்லம், விடியல் பயணம் போன்ற திராவிட மாடல் திட்டங்களைக் காப்பியடித்து, அதிமுக தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட அவர், அவருடைய தேர்தல் அறிக்கையைப் பார்த்து, காப்பி அடித்துவிட்டோம் என்று புலம்புகிறார்.
பழனிசாமியின் அறிவுத்திறத்திற்கு, சேக்கிழார் எழுதிய கம்பராமாயணம் தொடங்கி, பல எடுத்துக்காட்டுகள் இருந்தாலும், இப்போது புதிதாக ஒரு எடுத்துக்காட்டு வந்திருக்கிறது. அவருக்கு எதைப் பற்றியும் புரிதல் கிடையாது; தொலைநோக்குப் பார்வையும் இல்லை என்பதை தன்னுடைய உளறல்களால் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.
அவரின் உளறல்களிலேயே ஹைலைட் எது தெரியுமா? “எப்படி உங்களின் திட்டங்களை நிறைவேற்றுவீர்கள்” என்று கேட்டால், “வரியை உயர்த்தி நிறைவேற்றுவோம்” என்று சொல்கிறார். பழனிசாமியால் மட்டும்தான், இப்படியெல்லாம் சிந்திக்க முடியும். அதனால்தான், அந்தளவிற்கு பழனிசாமி யை, ஈஸியாக மிரட்டி, தங்களின் அடிமைக் கூட்டணியில் வைத்திருக்கிறது பாஜக.
அந்த என்டிஏ கூட்டணிக்கு ஒரே ஒரு நோக்கம்தான், தமிழ்நாட்டு வளர்ச்சியை தடுக்க வேண்டும். திராவிட மாடல் ஏற்படுத்தியிருக்கும் இந்த வளர்ச்சியை அழிக்க வேண்டும். இதுதான், என்டிஏ கூட்டணியின் நோக்கம். அந்த கூட்டணியின் தலைமையாக இருக்கும் பாஜகவிற்கு, தமிழ்நாட்டில் நம்மை எதிர்ப்பதற்கு வலிமை இல்லை என்று, அதிமுக-வை விலைக்கு வாங்கியிருக்கிறது.
பொதுவாக, பாஜக-வைப் பொறுத்தவரைக்கும் மக்களுக்கு நல்லது செய்யாது. ஆனால், தேர்தல் வந்துவிட்டது என்றால், கண்துடைப்பிற்காக பட்ஜெட்டில் சில அறிவிப்புகளைக் கொடுப்பார்கள். ஆனால், தமிழ்நாட்டிற்கு அதைக்கூட செய்ய மனமில்லாத, வஞ்சக எண்ணத்தோடு இருக்கும் உருவம்தான் என்டிஏ.
பாஜக ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு, தமிழ்நாட்டிற்கு எந்த நன்மையும் செய்ததில்லை. எந்தச் சிறப்பு திட்டத்தையும் செய்யவில்லை; நாம் வைத்த எந்தக் கோரிக்கையையும் நிறைவேற்றவில்லை. மதுரையில் ஒரு எய்ம்ஸ் அறிவித்தார்கள்; அதன் நிலைமையை நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரிய வேண்டும் என்று அவசியமில்லை.
சென்னை மெட்ரோ திட்டத்திற்கு நிதி தரவில்லை. ஓசூர் விமான நிலையத்திற்கு அனுமதி கேட்டிருக்கிறோம்; தரவில்லை. குடிநீர் திட்டத்திற்கான நிதியும் தரவில்லை. இத்தனை தடைகளையும் சமாளித்துப் பல்வேறு சாதனைகளை நாம் செய்திருக்கிறோம். திறமையான நிர்வாகத்தால் ‘நம்பர் ஒன்’ மாநிலமாக உயர்ந்திருக்கிறோம்.
இருப்பதிலேயே என்ன கொடுமை என்றால்? இந்தித் திணிப்பை ஏற்றுக்கொள்ளவில்லை என்று, நம்முடைய வீட்டுக் குழந்தைகள் படிப்பதற்கான கல்வி நிதியைக்கூட இதுவரைக்கும் கொடுக்கவில்லை. இப்படி வஞ்சக எண்ணம் கொண்ட கூட்டத்திடம் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை ஒப்படைக்க முடியுமா? இப்படிப்பட்ட வஞ்சக கூட்டத்திடம் தமிழ்நாட்டு மக்களை ஒப்படைக்க முடியுமா?
என்டிஏ கூட்டணியை தமிழ்நாடு புறக்கணிக்க வேண்டும். அப்போதுதான், தமிழ்நாட்டின் எதிர்காலம் காப்பாற்றப்படும். என்டிஏ கூட்டணி என்பது, எப்படிப்பட்ட சந்தர்ப்பவாத கூட்டணி என்று நீங்களே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். கரப்ஷன் - கமிஷன் - கலக்ஷன் என்று ஆட்சி நடத்திய பழனிசாமி அவர்களை மிரட்டி கூட்டணி அமைத்து, தமிழ்நாட்டின் உரிமைகளை பறித்து, வரிசையாக பல துரோகங்களைச் செய்து, பிரிந்த மாதிரி நாடகங்களை நடத்தி, கடைசியாக இப்போது, டெல்லியில் தீர்மானித்து, தோற்பதற்காகத் தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறது என்டிஏ. இதுதான் உண்மை.
அதனால்தான் சொன்னேன்… இந்தத் தேர்தல் என்பது, தமிழ்நாடு அணி vs டெல்லி அணி. தமிழ்நாட்டைக் காக்க வேண்டும் என்றால், திமுகதான் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும். தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து நடைபோட வேண்டும் என்றால், திமுக ஆட்சியில் தொடர வேண்டும்! தமிழ்நாடு கலவர பூமியாக மாறாமல் இருக்க வேண்டும் என்றால், பாஜக - அதிமுக கூட்டணியை வேரோடு வீழ்த்த வேண்டும்.
நீங்கள் அனைவரும் ஒரு விஷயத்தை நன்றாக புரிந்துக் கொள்ள வேண்டும், நாம் போராடுவது, திமுக-வின் வெற்றிக்காக மட்டுமல்ல; திமுக தலைமையில் அமைந்திருக்கும் கூட்டணியின் வெற்றிக்காக மட்டுமல்ல; இது தமிழ்நாட்டின் வெற்றி! மறந்துவிடாதீர்கள். தமிழ்நாட்டுக்கான வெற்றி இது.
எனவே, அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, நம்முடைய தாய்த் தமிழ்நாட்டைக் காக்க, தமிழ்நாட்டு மக்கள் அனைவரும், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். இந்த மண்ணின் மைந்தனாக கேட்கிறேன்... கருணாநிதியின் மகனாக கேட்கிறேன்... உங்களின் பொன்னான வாக்குகளை, திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்கு நீங்கள் வழங்க வேண்டும்.
அமைய இருக்கும் திராவிட மாடல் 2.0 ஆட்சியில், எங்களின் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் அளவிற்கு சிறப்பான ஆட்சியை, தமிழ்நாட்டை புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்லும் ஆட்சியை, நாங்கள் வழங்குவோம். ஏப்ரல் 23 அன்று, நீங்கள் வாக்களிக்கச் செல்லும்போது நீங்கள் சிந்திக்க வேண்டியது, ஒன்றே ஒன்றுதான். என்டிஏ கூட்டணியின் தமிழர் விரோத சந்தர்ப்பவாத கூட்டணியா? திமுக சாதனைகளின் தொடர்ச்சியா? என்பதைச் சிந்தித்து வாக்களியுங்கள்” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.