நெல் கொள்முதல் இலக்கை உயர்த்தி 47.50 லட்சம் டன்னாக நிர்ணயிக்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

நெல் கொள்முதல் இலக்கை உயர்த்தி 47.50 லட்சம் டன்னாக நிர்ணயிக்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் நெல் கொள்முதல் அதிகரித்துள்ளதால் கரீப் பருவ நெல் கொள்முதல் இலக்கை 23.50 லட்சம் டன்னில் இருந்து 47.50 லட்சம் டன்னாக நிர்ணயிக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமருக்கு அவர் நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 2025-26-ம் ஆண்டின் கரீப் பருவத்தில் 20.50 லட்சம் ஹெக்டேரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் மேட்டூர் அணை பாசனத்துக்காக உரிய நேரத்தில் திறக்கப்பட்டது, சாதகமான தட்பவெப்பநிலை காரணமாக அதிக பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டது.

மேம்படுத்தப்பட்ட பயிர் மேலாண்மை முறைகள், சிறந்த பாசனக் கட்டமைப்பு வசதி, அதிக மகசூல் தரும் நெல் ரகங்களை விவசாயிகள் பயிரிட்டது ஆகிய காரணங்களால் மாநிலத்தின் நெல் உற்பத்தி மற்றும் உற்பத்தி திறன் வரலாற்றுச் சிறப்புமிக்க நிலையை அடைந்துள்ளது.

இதை முன்னறிந்துதான் அரிசி கொள்முதல் இலக்கை 16 லட்சம் டன்னில் இருந்து, பருவ இறுதியில் கொள்முதல் செய்யப்படும் அளவுக்கேற்ப திருத்தி அமைக்குமாறு கடந்த 2025 நவ.17-ம் தேதி தங்களுக்கு எழுதிய கடிதத்தில் கோரியிருந்தேன்.

மேலும், நடப்பு பருவத்தில், கடந்த 12-ம் தேதி நிலவரப்படி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகமும் (டிஎன்சிஎஸ்சி), இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பும் (என்சிசிஎஃப்) இணைந்து 36.63 லட்சம் டன் நெல்லை கொள்முதல் செய்துள்ளன. 2024-25-ம் ஆண்டு கரீப் சந்தை பருவத்தின் (கேஎம்எஸ்) இதே காலகட்டத்தில் கொள்முதல் செய்யப்பட்ட 24.17 லட்சம் டன்னைவிட, இந்த ஆண்டில் கொள்முதல் கணிசமாக அதிகரித்துள்ளது.

நடப்பு பருவத்தில் கொள்முதல் செய்யப்பட்ட 36.63 லட்சம் டன் நெல்லில் இருந்து சுமார் 24.91 லட்சம் டன் அரிசி அரவை செய்யப்படும் என தெரிவித்து, மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட 16 லட்சம் டன் அரிசி கொள்முதல் இலக்கு, தற்போதைய கொள்முதல் அளவின்படி ஏற்கெனவே அடையப்பட்டுள்ளது. மேலும், நெல் கொள்முதல் சராசரியாக தினமும் சுமார் 50 ஆயிரம் டன் என்ற விகிதத்தில் தொடர்ந்து இருந்து வருவதால் எதிர்வரும் நாட்களிலும் இதே நிலை நீடிக்கலாம்.

இதனால், மொத்த நெல் கொள்முதல் அளவு 47.50 லட்சம் டன்னை எட்டும். இதன் காரணமாக, சுமார் 32 லட்சம் டன் அரிசி அரவை செய்யப்பட்டு, பெறப்படும் நிலை ஏற்படும். முந்தைய கடிதத்தில் நான் கோரியபடி, கொள்முதல் நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்கவும், விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் பணம் வழங்குவதை உறுதி செய்யவும், கரீப் பருவத்தில் 2025-26-ம் ஆண்டுக்கான தமிழகத்தின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்னில் இருந்து 32 லட்சம் டன்னாக மாற்றியமைக்க தேவையான உத்தரவுகளை வழங்க வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

நெல் கொள்முதல் இலக்கை உயர்த்தி 47.50 லட்சம் டன்னாக நிர்ணயிக்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்
எங்கே இருக்கிறார் நெதன்யாகு? - ‘ஆறு விரல்’ வீடியோவால் சர்ச்சை!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in