“எதிர்க்கட்சிகளுக்கு தூக்கம் போய்விட்டது” - திமுக இளைஞரணி குறித்து மு.க.ஸ்டாலின் பெருமிதம்

“எதிர்க்கட்சிகளுக்கு தூக்கம் போய்விட்டது” - திமுக இளைஞரணி குறித்து மு.க.ஸ்டாலின் பெருமிதம்

Published on

சென்னை: விருதுநகரில் நாளை நடைபெற இருக்கும் திமுக இளைஞரணி மாநாட்டுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “1980-இல், நாங்கள் இளைஞர்களாக இருந்தபோது தொடங்கப்பட்ட அணி, இளைஞரணி. 1949-இல் இளைஞர்களால் தொடங்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இந்தப் பேரியக்கத்தின் அடுத்த தலைமுறையாக மீண்டும் இளைஞர்களிடம் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கொண்டு சேர்க்க இந்த அணியைத் தொடங்கினோம்.

அன்றைக்கு என்னுடன் களத்தில் நின்று கழகத்தை வளர்த்த இளைஞர்கள்தான், இன்றைக்கு உங்கள் முன்னால் அமைச்சர்களாக, எம்.எல்.ஏ.க்களாக, எம்.பி.க்களாக, மாவட்டக் கழகச் செயலாளர்களாக பல்வேறு பொறுப்புகளில் இருக்கிறார்கள். எங்களுக்கு அடுத்தபடியாக, இப்போது, இந்த இயக்கத்தை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை, அந்தக் கடமையை உதயநிதி சிறப்பாகச் செய்து கொண்டிருக்கிறார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது எப்போதும் வன்மத்தோடு இருக்கும் எதிரிகள் என்ன கட்டமைத்தார்கள்? இளைஞர்கள் இனி திமுகவிற்கு வருவார்களா என்று சந்தேகம் எழுப்புவது போன்று, தங்களுடைய ஆசைகளை வெளிப்படுத்திக் கொண்டு இருந்தார்கள். அதையெல்லாம் உடைத்து, தம்பி உதயநிதி, இளைஞரணிக்கு இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் 5 லட்சம் நிர்வாகிகளை நியமித்து, சாதனை செய்திருக்கிறார்.

இது போதாது என்று மண்டல அளவில் இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு என்ற பெயரில் மாநாடுகளை நடத்துகிறார். ஏற்கனவே, திருவண்ணமலையில் ஒன்றரை லட்சம் நிர்வாகிகளை கூட்டி, வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு மாநாட்டை நடத்திவிட்டார். மிக கச்சிதமாக நடந்த அந்த மாநாட்டைப் பார்த்து, எதிர்க்கட்சிகளில் இருக்கும் பலருக்கும், தூக்கம் போய்விட்டது. 5 லட்சம் நிர்வாகிகளை ஒரு கட்சியின் துணை அமைப்பில் நியமித்து வேலை செய்வதைப் பார்த்தால், மற்ற கட்சிகள் அனைத்தும் பின்பற்றும் ப்ளூ-ப்ரிண்ட்-ஐ திமுக இளைஞரணிதான் கொடுக்கப் போகிறது என்று நினைக்கிறேன்.

இளைஞரணியின் ஒன்றிய, நகர, பேரூர் அமைப்பாளர்களாக இருக்கும் 12 ஆயிரத்துக்கும் அதிகமான நிர்வாகிகளைச் சேர்த்து, கிளை – வார்டு – பாகம் அளவிலும் 5 லட்சம் நிர்வாகிகளை நியமிக்க வேண்டும் என்று இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ‘மிஷன் மோட்’-இல் வேலை செய்திருக்கிறார். அதிலும், இதை அவர் செய்து காட்டியிருக்கும் செயல்முறையே மலைப்பை ஏற்படுத்துகிறது.

தமிழ்நாடு முழுவதும் விருப்ப மனுக்கள் பெற்று, அந்தத் தகவல்களை ‘டிஜிட்டைஸ்’ செய்து, அவர்களை எல்லாம் அன்பகத்திற்கே நேரில் அழைத்து ‘வெரிஃபை’ செய்திருக்கிறார்கள். 35 வயதிற்கும் குறைவாக இருப்பவர்களை நியமித்து, அந்தப் பட்டியலை முரசொலியில் முறையாகத் தொடர்ந்து வெளியிட்டார்கள். 78 கழக மாவட்டங்களிலும் சோஷியல் மீடியாவிற்கு என்றே தனியாகத் துணை அமைப்பாளர்களையும் நியமித்திருக்கிறார்கள்.

இதன் தொடர்ச்சியாகத்தான், மண்டல வாரியாக இந்த நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெறுகிறது. 5 லட்சம் பேருக்கும் புகைப்பத்துடன் கூடிய அடையாள அட்டையுடன் ஒரு ராணுவப் படையைப் போன்ற, உறுதியான கட்டமைப்பு, கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குடன் இது நடக்கிறது.

அதனால்தான், பிப்ரவரி 7-ஆம் நாள் விருதுநகரில் கூட்டம் என்று சொன்னதும், எனக்குள் புது உற்சாகம் உண்டானது. இந்த விருதுநகர் மாநாட்டில், எதற்காக திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து இயங்க வேண்டும். இளைஞர்களான நீங்கள் எவ்வாறு கொள்கையுடன் செயல்பட வேண்டும். எதற்காக திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிதான் தமிழ்நாட்டில் தொடர வேண்டும் என்பது பற்றியெல்லாம், இளைஞர்களான உங்களிடம் ஷேர் செய்யப் போகிறேன். பிப்ரவரி 7 - விருதுநகரில் சந்திப்போம்” என்று அவர் பேசியுள்ளார்.

“எதிர்க்கட்சிகளுக்கு தூக்கம் போய்விட்டது” - திமுக இளைஞரணி குறித்து மு.க.ஸ்டாலின் பெருமிதம்
‘‘சபாநாயகர் பதவிக்கு ஓம் பிர்லா களங்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்’’ - செல்வப்பெருந்தகை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in