

சென்னை: தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக தமிழகம் போராடியது, அதன் பலனாக வென்றது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் தொகுதி மறுவரையறை மசோதா தோல்வியடைந்தது. இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: டெல்லியை வீழ்த்தியது தமிழகம். டெல்லியின் ஆணவத்தையும், அதற்கு துணை போனவர்களையும் ஏப்.23-ம்தேதி ஒருசேர வீழ்த்துவோம்.
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக தமிழகம் போராடியது, அதன் பலனாக வென்றது. இந்திய ஜனநாயகத்தில் யாருக்கு பிரதிநிதித்துவம் இருக்கும், யாருடைய குரலுக்கு இடமிருக்கும் என்பதுதான் தொகுதி மறுவரையறை. அது மத்திய அரசை பலப்படுத்துவதாக இருக்க வேண்டுமே ஒழிய, பலவீனப்படுத்துவதாக இருக்கக் கூடாது.
பெரியார் -அண்ணா - கருணாநிதி காட்டிய பாதையில், தமிழகம் எப்போது நீதி, கண்ணியம்,கூட்டாட்சி ஆகியவற்றுக்காகவே நின்றுள்ளது. தென்னிந்தியா ஒன்றிணைந்தது; நமது குரல் கேட்கப்பட்டது; ஜனநாயகம் வென்றது. நாம் தொகுதி மறுவரையறையை எதிர்க்கவில்லை. நன்கு சிந்தித்து, அனைவரையும் கலந்தாலோசித்து, அனைவரும் ஏற்றுகொண்ட, நியாயமான நடைமுறையையே நாம் வலியுறுத்தினோம்.
தமிழகத்தின் உரிமைகளுக்கும், நமது பண்பாடு மற்றும் அடையாளத்துக்கும், இந்திய கூட்டாட்சிக்கும் ஊறு வரும்போது, ஒற்றுமையுடன் நிற்பதுதான் நமது உறுதி. இந்த அநீதியை எதிர்த்து ஓரணியில் நின்ற அனைத்துத் தோழமைக் கட்சிகளுக்கும் என்னுடைய நன்றி.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, மசோதா தோல்வியடைந்ததையடுத்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் அக்கட்சியினர் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினர்.