

சென்னை: கிராமக் கோயில் பூசாரிகளுக்கு ரூ.1,500 மாத ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பூசாரிகள் மறைந்தால் வாரிசுகளுக்கு வழங்கப்படும் குடும்ப உதவித் தொகை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்படும் என்பது உட்பட 11 புதிய அறிவிப்புகளையும் அப்போது அவர் வெளியிட்டார்.
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் கிராமக் கோயில் பூசாரிகள் மாநாடு சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு, கிராமக் கோயில் பூசாரிகள் 6 ஆயிரம் பேருக்கு மாதாந்திர ஊக்கத் தொகையாக ரூ.1,500 வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன் அடையாளமாக 11 பூசாரிகளுக்கு காசோலைகளை வழங்கினார்.
பூசாரிகள் 10 பேருக்கு பூஜை உபகரணங்கள், 2 பேருக்கு இருசக்கர வாகனம் வாங்குவதற்கான மானியம் தலா ரூ.12 ஆயிரத்துக்கான காசோலை, 3 பேரின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை, ஒரு பூசாரியின் வாரிசுக்கு குடும்ப நலநிதி ஆகியவற்றையும் வழங்கினார்.
பின்னர் முதல்வர் பேசியதாவது: உண்மையான ஆன்மிக அன்பர்களும், இறைப் பற்றாளர்களும் விரும்பக்கூடிய அரசாக இந்த திராவிட மாடல் அரசு உள்ளது. இந்த மாநாடுபலருக்கு வியப்பாகவும் சிலருக்கு எரிச்சல்கூட வரலாம். இந்த மண்ணில் வாழும் பெரும்பான்மையான மக்களின் உரிமைகளை நிலைநிறுத்திய திராவிட இயக்க உணர்வை, இந்த அரசில்தான் நிலைநாட்டியுள்ளோம்.
தமிழக வரலாற்றில் இல்லாத அளவுக்கு, இந்த அரசு பொறுப்பேற்ற 1,759 நாட்களில், 4,335 கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. கோயில் சொத்துகளை மீட்க வேண்டும் என பெருமுயற்சி எடுத்து, அதிலும் சாதனை படைத்துள்ளோம். ரூ.8,440 கோடி மதிப்பிலான 8,140 ஏக்கர் நிலங்களை மீட்டுள்ளோம்.
இந்த நிலையில், கிராமக் கோயில் பூசாரிகளின் நலனுக்கான 11 புதிய அறிவிப்புகளை தற்போது வெளியிடுகிறேன். பொங்கல் திருநாளுக்கு அனைத்து உறுப்பினர்களுக்கும் புத்தாடை வழங்கப்படும். உறுப்பினர் மறைந்தால் வாரிசுகளுக்கு வழங்கப்படும் தொகை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்படும். கிராமக் கோயில் பூசாரிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஆண்டுவருமான உச்சவரம்பு ஆண்டுக்கு ரூ.1.25 லட்சமாக உயர்த்தப்படும். காலமான உறுப்பினரின் இறுதிச் சடங்குக்காக வழங்கப்படும் ரூ.5 ஆயிரம் உதவித் தொகை ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படும்.
ஆண்டுதோறும் 500 பூசாரிகளுக்கு, தேர்ந்த பயிற்றுநர்களைக் கொண்டு புத்தொளிப் பயிற்சி நடத்தப்படும். பூசாரிக்கு ரூ.3 ஆயிரம், மகனுக்கு ரூ.3 ஆயிரம், மகளுக்கு ரூ.5 ஆயிரம் என வழங்கப்படும் திருமண நிதியுதவி ரூ.1,000 உயர்த்தப்படும். பூசாரியின் மகன், மகளுக்கானகல்வி நிதியுதவி, ரூ.2 ஆயிரம் மற்றும் ரூ.2,500 ஆக உயர்த்தப்படும். இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புக்கான நிதியுதவி ஆண்டுக்கு மேலும் ரூ.2 ஆயிரம் உயர்த்தப்படும்.
தொழில்சார்ந்த இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு நிதி ஆண்டுக்கு மேலும் ரூ.2 ஆயிரம் உயர்த்தப்படும். தொழிற்பயிற்சி நிலையத்தில் பயில ஆண்டுக்கு ரூ.1,000 உயர்த்தப்படும். உறுப்பினர்களுக்கு மூக்குக் கண்ணாடி வாங்க வழங்கப்படும் ரூ.500 நிதியானது ரூ.1,000 ஆக உயர்த்தப்படும்.
சமரசமும், சமத்துவமும்தான் ஆன்மிகப் பாதையாக இருக்க முடியும். தமிழகத்தில் மட்டுமின்றி, நாடு முழுவதும் இத்தகைய சமத்துவம், சகோதரத்துவம் நிலைபெற வேண்டும். மக்களுக்குள் ஒற்றுமை ஓங்கி வளர வேண்டும். மக்களைப் பிரிக்க நினைக்கும் கும்பல்களை அடையாளம் கண்டு புறக்கணிக்க வேண்டும். உங்கள் ஆதரவோடு திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.
இந்த மாநாட்டில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார், மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞானபாலய சுவாமிகள், ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் ராமானுஜ எம்பார் சுவாமிகள், சென்னை மேயர் பிரியா, அறநிலையத் துறை செயலர் க.மணிவாசன், துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், கூடுதல் ஆணையர்கள் துரை.ரவிச்சந்திரன், மா.கவிதா, அறநிலையத் துறை ஆலோசனைக் குழு உறுப்பினர் ராம சுப்பிரமணியன், கிராமக் கோயில் பூசாரிகள் பேரவை அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி, கிராமக் கோயில் பூசாரிகள் சங்கத் தலைவர் வாசு மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.