

முதல்வர் ரங்கசாமி ஆலோசனை
புதுச்சேரி: புதுச்சேரியில் மஞ்சள் ரேஷன் அட்டைத்தாரர்கள் மருத்துவ செலவை திரும்ப பெறும் புதிய திட்டத்தை செயல்படுத்த முதல்வர் ரங்கசாமி தலைமையில் ஆலோசனை நடந்தது.
புதுச்சேரி அரசு, சுகாதாரத் துறையின் செயல்பாடுகள் மற்றும் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் ரங்கசாமி தலைமையில் புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், சட்டமன்ற உறுப்பினர்கள் நாஜீம், ஏகேடி ஆறுமுகம், செந்தில்குமார், மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், சுகாதாரத் துறை இயக்குநர் செவ்வேல் மற்றும் மருத்துவ அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
புதுச்சேரியில் சிவப்பு ரேஷன் அட்டை வைத்திருக்கும் குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை வழங்கும் ஆயஷ்மான் பாரத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதுபோல், மஞ்சள் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மருத்துவச் செலவை திரும்பப் பெறுவதற்கான (Medical Reimbursement) புதிய திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
அத்துடன் புதுச்சேரியில் மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் கூடுதலான மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது குறித்தும், மருத்துவமனைகளில் தேவையான அனைத்து மருந்துகளும் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்வது குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.