

காவல் ஆளிநர்களுக்கு தமிழ்நாடு முதல்வர் காவல் பதக்கங்களை, சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார். | படம்: எல்.சீனிவாசன் |
சென்னை: சென்னையில் 385 போலீஸாருக்கு முதல்வர் காவல் பதக்கங்களை காவல் ஆணையர் அமல்ராஜ் வழங்கினார்.
காவல் துறையில் 10 ஆண்டுகள் எவ்வித தண்டனையும் இன்றி சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் முதல்வர் காவல் பதக்கம் வழங்கப்படுகிறது.
அதன்படி, சட்டம் - ஒழுங்கு, குற்றப்பிரிவில் 221 பேர், போக்குவரத்து பிரிவில் 102 பேர், சிறப்பு பிரிவுகளில் 62 பேர் என மொத்தம் 385 பேருக்கு எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற விழாவில், சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் பதக்கங்களை வழங்கினார்.
அவர் பேசும்போது, “காவல் துறையினர் நேர்மை, ஒழுக்கம், அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும். நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தாமல் நம்பிக்கையை உருவாக்கும் வகையில் மனிதநேயத்துடன் பணியாற்ற வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தொழிலதிபர் ஜெம் வீரமணி மீது 18 சிறுமிகள் புகார் கொடுத்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்மீது 8 போக்சோ வழக்குகள், ஒரு சிறுமி தற்கொலை வழக்கு என மொத்தம் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 2 வழக்குளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துவிட்டோம். மற்ற வழக்குகளிலும் விரைவில் தாக்கல் செய்யப்படும்.
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் மீதான வழக்கு விசாரணை கிட்டத்தட்ட முடியும் நிலையில் உள்ளது. சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு விட்டனர். இன்னும் 15 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்.
போதைப் பொருள் ஒழிப்பில் சென்னை காவல் துறை சிறப்பாக செயல்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளைவிட, இந்த ஆண்டில் இதுவரை அதிக அளவில் போதைப் பொருள் வழக்குகளை பதிவு செய்துள்ளோம்.
போதைப் பொருட்களும் அதிக அளவில் கைப்பற்றப்பட்டு, குற்றவாளிகளும் அதிக அளவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மாத முடிவில் இது தொடர்பான முழு விவரங்களும் வெளியிடப்படும்.
போதை மாத்திரை, போதை ஸ்டாம்ப் விற்ற கும்பலைச் சேர்ந்த சிலர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் முக்கிய குற்றவாளி ஒருவரை தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சென்னை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னையில் சிங்கப்பெண் சிறப்பு படை போலீஸாரும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்வில் போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் சாமுண்டீஸ்வரி, இணை ஆணையர் உமா, துணை ஆணையர் ஜெயகரன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளும், முதல்வர் விருது பெற்ற போலீஸாரின் குடும்பத்தினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.