காவலர் தினத்தை முன்னிட்டு பெசன்ட் நகர் கடற்கரையில் தூய்மைப் பணி: 1,000 பேர் பங்கேற்பு

காவலர் தினத்தை முன்னிட்டு பெசன்ட் நகர் கடற்கரையில் தூய்மைப் பணி: 1,000 பேர் பங்கேற்பு
Updated on
1 min read

சென்னை: காவலர் தினத்தை முன்னிட்டு பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெற்ற தூய்மைப் பணியை சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் இன்று காலை தொடங்கி வைத்து, கடற்கரையில் கிடந்த குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்தினார். இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

1859-ம் ஆண்டில் மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டம் நிறைவேற்றப்பட்டு, நவீன மற்றும் அமைப்பு ரீதியான காவல்துறை தோற்றுவிக்கப்பட்ட செப்டம்பர் 6-ஆம் நாள் ஆண்டுதோறும் 'காவலர் தினமாக' சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பெசன்ட் நகர் கடற்கரையை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. காவல் ஆணையர் அமல்ராஜ் தொடங்கி வைத்து தூய்மைப் பணியில் ஈடுபட்டார்.

போலீஸ் அதிகாரிகள், ஊர்க்காவல் படை வீரர்கள், மாநகராட்சி ஊழியர்கள், என்சிசி, என்எஸ்எஸ் கல்லூரி மாணவ-மாணவிகள் என 1,000-க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து, காவலர் தினக் கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாகப் பல்வேறு சிறப்பான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

காவல்துறை இசைக்குழு மற்றும் பேக்-பைப்பர் இசைக்குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னையின் முக்கிய சந்திப்புகளில் உள்ள எல்இடி, எல்சிடி திரைகளில் 'காவலர் தினம்' குறித்த வாழ்த்துச் செய்திகள் மற்றும் விழிப்புணர்வு காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன.

மேலும், சென்னையின் 4 காவல் மண்டலங்கள் மற்றும் 12 மாவட்டங்களில் உள்ள குடியிருப்போர் நலச்சங்கங்களுடன் இணைந்து போதைப்பொருள் ஒழிப்பு, சைபர் குற்றத் தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த சிறப்பு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் சென்னை காவல் கூடுதல் ஆணையர்கள் ஏ.ஜி. பாபு (தலைமையிடம்), கே.எஸ்.நரேந்திரன் நாயர் (தெற்கு), தெற்கு மண்டல இணை ஆணையர் விஜயகுமார், துணை ஆணையர்கள் கார்த்திகேயன் (அடையார்), குமார் (தி.நகர்), சீனிவாசன் (புனித தோமையர் மலை), ஜெயகரன் (ஆயுதப்படை), ராதாகிருஷ்ணன் (மோட்டார் வாகன பிரிவு) உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் நேரில் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியின் இறுதியில் பேசிய காவல் ஆணையர், "கடற்கரையை அசுத்தப்படுத்தாமல் தூய்மையாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க வேண்டிய பொறுப்பு பொதுமக்கள் ஒவ்வொருவருக்கும் உள்ளது. கடற்கரைக்கு வருவோர் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை கண்ட இடங்களில் வீசாமல், அதற்கென வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் மட்டுமே போட வேண்டும்" என வேண்டுகோள் விடுத்தார்.

காவலர் தினத்தை முன்னிட்டு பெசன்ட் நகர் கடற்கரையில் தூய்மைப் பணி: 1,000 பேர் பங்கேற்பு
“பாதுகாப்பான உன்னத தமிழகத்தை உருவாக்குவோம்” - காவலர் நாளில் முதல்வர் விஜய் வாழ்த்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in