

சென்னை: நவோதயா பள்ளி விவகாரத்தில் அதிமுக - பாஜக இடையேயான முரண்பட்ட கொள்கைகள் நிலவி வருவது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் ஜவஹர் நவோதயா பள்ளிகளை அமைப்பதற்கான இடங்களை 6 வாரத்துக்குள் கண்டறிய வேண்டும் என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுகவைபோல, அதிமுகவும் மும்மொழிக் கொள்கையை எதிர்க்கிறது. இந்நிலையில், தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்கும் சூழலை திமுக அரசு ஏற்படுத்திவிட்டதாக, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் அமைக்கப்படும்” என உறுதிபட கூறி வருகிறார். ஆனால், தமிழகத்தில் அதே கூட்டணிக்கு தலைமை வகிக்கும் பழனிசாமி, “மூத்த வழக்கறிஞர்களை நியமித்து, தமிழகத்தின் வாதங்களை முழுமையாக உச்ச நீதிமன்றத்தில் எடுத்துரைத்து, நவோதயா பள்ளிகள் வராமல் தடுக்க அனைத்து நடவடிக்கையும் திமுக அரசு எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் நவோதயா பள்ளிகள் தொடர்பாக பாஜக, அதிமுக தலைவர்கள் கூறியிருப்பதாவது:
பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத்: நவோதயா பள்ளி விவகாரத் தில் தாயுள்ளத்தோடு தமிழக கிராமப்புற மாணவர்களின் நலனை பழனிசாமி கருத்தில் கொண்டு, உச்ச நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற திமுக அரசை வலியுறுத்த வேண்டும். மோடி தலைமையிலான மத்திய அரசு, தமிழகத்தின் நலன் காக்கும் அரசு என்பதால், தாய்மொழி தமிழை முதல் நிலையில் கற்பிக்கக்கூடிய நவோதயா பள்ளிகள் தமிழகத்தில் அமைய பழனிசாமி ஆதரவளிக்க வேண்டும். இந்தி எதிர்ப்பு, இந்தி திணிப்பு என்று கற்பனை கபட நாடக மொழி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். தமிழகத்தில் நவோதயா பள்ளிகளால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி முழுமையாக ஆராய அதிமுக சார்பில் ஒரு குழுவை அமைக்க வேண்டும்.
அதிமுகவின் முன்னாள் கல்வித்துறை அமைச்சர் வைகைச்செல்வன்: பாஜகவுடன் தேர்தலுக்காக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. பொது எதிரியை வீழ்த்தும் நோக்கத்தில் இந்தக் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பதால், அதன் அனைத்து கொள்கைகளையும் ஏற்றுக்கொண்டதாக பொருள் கொள்ளக்கூடாது. அதிமுகவின் கொள்கை உயிர்நாடி தமிழ், இணைப்பு மொழி ஆங்கிலம், இந்தி திணிப்பு கூடாது என்பதுதான். அதில் அதிமுக உறுதியாக உள்ளது.
பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்: நான் அமைச்சராக இருக்கும்போது, நாடாளுமன்றத்தில், ஸ்மிருதி இரானி 60 நவோதயா பள்ளிகள் புதிதாக திறக்கப்படும் என அறிவித்தார். உடனடியாக நான், தமிழகத்துக்கு 12 பள்ளிகள் வேண்டும் என கோரிக்கை விடுத்தேன். மேலும், அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, டெல்லி வந்திருந்தபோது, அவரிடமும் நவோதயா பள்ளி குறித்து தெரிவித்தேன். இன்று தனியார் பள்ளிகள் புற்றீசல்கள்போல பெருகிவிட்டன. அங்கு அதிகளவில் கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
எனவே, குறைந்த கல்விக் கட்டணம் அல்லது இலவச கல்வி கிடைக்கும் வகையிலான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். எனவே, நவோதயா பள்ளிகள் தமிழகத்தில் அமைப்பது குறித்து, அனைத்து கட்சிகளும் யோசித்து நல்ல முடிவை எடுக்க வேண்டும். யார் யாருக்கு என்ன மொழி தேவையோ அதை படிக்க விட வேண்டும். தமிழனாக பிறந்ததில் நான் பெருமை கொள்கிறேன். தமிழ் மொழியை தலைமுறை தலைமுறையாக கொண்டு சேர்க்க வேண்டியது எனது பொறுப்பு. அதேநேரத்தில், இந்த உணர்வுடன், சோற்றுக்காக மற்ற மொழியை படிப்பதில் என்னதவறு இருக்கிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பி.வில்சன் கருத்து: ஜவஹர் நவோதயா பள்ளிகளை தமிழ கத்தில் தொடங்குவதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு வழக்கு விசாரணையில், தமிழக அரசு தரப்பில் ஆஜராகி வாதிட்ட மூத்த வழக்கறிஞர் பி,வில்சனிடம்நீதிமன்றத்தில் நடந்த வாதங்கள் குறித்து கேட்டபோது அவர் கூறியதாவது: ஏற்கெனவே மத்திய அரசு சமக்ர சிக் ஷா திட்டத்தின்கீழ் தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய ரூ.3 ஆயிரத்து 500 கோடியை வழங்க மறுக்கிறது.
தற்போது நவோதயா பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை பின்பற்றப்படுகிறது. தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் என்பதை தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து அதை சட்டமாகவும் ஆக்கியுள்ளது. மேலும், ஒவ்வொரு பள்ளிக்கும் 30 ஏக்கர் நிலம் தேவை என்கின்றனர்.
அத்துடன் நில்லாமல் 3 ஆண்டுகளுக்கு அந்தப் பள்ளிகளை தமிழகஅரசே ஏற்று நடத்திக் கொடுக்கவேண்டும் என்கின்றனர். அதற்கான செலவையும் தமிழக அரசுதான் ஏற்க வேண்டும். முதலில் சமக்ர சிக் ஷா திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய ரூ.3 ஆயிரத்து 500 கோடியை வழங்கச்சொல்லுங்கள் என்றேன். அதற்கு நீதிபதிகள், மாநில அரசின் கொள்கை முடிவு இருமொழிக் கொள்கை என்றால் அதை மத்திய அரசிடம் தெரிவியுங்கள். அதுகுறித்து மத்திய அரசு பரிசீலிக்கும், எனக்கூறி விசாரணையை தள்ளி வைத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.