

பிரதிநிதித்துவப் படம்
புதுச்சேரி: முக்கியத் துறைகள் பாஜக அமைச்சர்களுக்கு முதல்வர் ரங்கசாமி ஒதுக்காததால் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் மோதல் போக்கு நிலவுகிறது. இதனால் புதுச்சேரியில் அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கிய கோப்புக்கு அனுமதி தருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
புதுவையில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் என்ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. தேர்தல் முடிவு வெளியாகி இரண்டரை மாதங்களாகியும் அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் நேற்று மாலை முதல்வர் ரங்கசாமி லோக் நிவாஸ் சென்று துணைநிலை ஆளுநர் கைலாஷ் நாதனை சந்தித்து, அமைச்சர்கள் இலாகா பட்டியலை வழங்கினார்.
வழக்கமாக இலாகா பட்டியல் வழங்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் அரசிதழில் வெளியிடப்படும். ஆனால் வெளியிடப்படவில்லை. இதனிடையே அமைச்சர் நமச்சிவாயம், முதல்வர் ரங்கசாமியை கோரிமேட்டில் உள்ள இல்லத்தில் தனியாக சந்தித்து பேசியுள்ளார். இருப்பினும் இன்று காலை வரை அமைச்சர்கள் இலாகா பட்டியல் அரசிதழில் வெளியிடப்படவில்லை.
இது பற்றி பாஜக வட்டாரங்களில் விசாரித்தபோது, “அமைச்சர்களுக்கு கடந்த முறை ஒதுக்கப்பட்ட இலாகாக்களையே மீண்டும் வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தோம். ஆனால் அதுபோல் முதல்வர் ரங்கசாமி ஒதுக்கவில்லை. குறிப்பாக ரங்கசாமியின் மருமகனான பாஜக அமைச்சர் நமச்சிவாயத்துக்கு கடந்த முறை தந்ததுபோல் முக்கிய இலாகா ஒதுக்காததால் அவரை நேரில் சந்தித்து பேசினார். ஆனாலும் முடிவு ஏதும் உறுதியாக ரங்கசாமி தெரிவிக்கவில்லை” என்றனர்.
குறிப்பாக சபாநாயகர் பதவியை பாஜக கேட்டுப் பெற்றுள்ளது. அப்பதவியை அதிமுகவுக்கு தர ரங்கசாமி திட்டமிட்டிருந்தார். அதுவும் இப்பிரச்சினைக்கு முக்கியக் காரணம் என்றும் என்டிஏ வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
முதல்வர் ரங்கசாமி நேற்று மாலை தந்த அமைச்சர்கள் இலாகா பட்டியல் தற்போது வரை வெளியாகாமல் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் என்டிஏ கூட்டணிக்குள் பாஜக- என்ஆர்.காங்கிரஸ் இடையே மோதல் வலுத்துள்ளது வெளிப்படையாகியுள்ளது.