"சர்க்கரைத் தொழிலை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டுவர நடவடிக்கை” - அமைச்சர் வினோத்

"சர்க்கரைத் தொழிலை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டுவர நடவடிக்கை” - அமைச்சர் வினோத்
Updated on: 
1 min read

சென்னை: சர்க்கரைத் தொழிலை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டுவர முதல்வர் விஜய் நடவடிக்கை எடுப்பார் என்று வேளாண்துறை அமைச்சர் ஆர்.வினோத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் செயல்பட்டு வரும் தனியார் சர்க்கரை ஆலைகளின் செயல்பாடுகள் மற்றும் முக்கிய பிரச்சினைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், வேளாண் துறை அமைச்சர் ஆர்.வினோத் தலைமையில், சென்னையில் உள்ள சர்க்கரைத்துறை ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் தனியார் சர்க்கரை ஆலைகளின் பிரதிநிதிகள் தங்களது ஆலைகளின் தற்போதைய செயல்பாடுகள், கரும்பு பதிவு, கரும்பு அரவை, கரும்பு கட்டுமானம், கரும்பு சாகுபடி பரப்பு, ஆலைகளின் உற்பத்தித் திறன் மற்றும் ஆலைகள் எதிர்கொள்ளும் பல்வேறு நடைமுறைகள் மற்றும் நிர்வாகப் பிரச்சினைகள் குறித்து விளக்கினர்.

பின்னர், கூட்டத்தில் அமைச்சர் ஆர்.வினோத் பேசியதாவது: தனியார் சர்க்கரை ஆலைகள் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பாக, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் விரிவாக ஆலோசித்து, அவற்றின் நடைமுறைச் சாத்தியக்கூறுகள் மற்றும் அரசின் கொள்கை நிலைப்பாடுகள் குறித்து உரிய முறையில் ஆய்வு செய்து, முதல்வரின் கவனத்துக்கு எடுத்து சென்று தீர்வு காணப்படும்.

கரும்பு விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்படுவதுடன், சர்க்கரை ஆலைகள் சிறப்பாக இயங்குவதற்கான சாதகமான சூழலை உருவாக்குவதும் அரசின் முக்கிய நோக்கமாகும். கரும்பு விவசாயிகளின் நலன், கரும்பு சார்ந்த தொழில் மற்றும் சர்க்கரை ஆலைகளின் நிலைத்தன்மை ஆகிய 3-ஐயும் ஒருங்கிணைத்து, சர்க்கரைத் தொழிலை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டுவர முதல்வர் நடவடிக்கை எடுப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில், வேளாண் துறை செயலர் ந.சுப்பையன், சர்க்கரைத் துறை ஆணையர் இரா.கண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

"சர்க்கரைத் தொழிலை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டுவர நடவடிக்கை” - அமைச்சர் வினோத்
‘இடைத்தேர்தல் செலவுகளை முதல்வர் விஜய் ஏற்க வேண்டும்’ - கே.பி.ராமலிங்கம் விமர்சனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in