

சென்னை: மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு குறித்த ‘துளி’ இயக்கத்துக்கான இலச்சினையைத் திறந்து வைத்த முதல்வர் விஜய், மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: ‘தமிழக முதல்வர் விஜய் இன்று (அக்.21) நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், சென்னை, சேப்பாக்கம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு குறித்த ‘துளி’ இலச்சினையைத் திறந்து வைத்து, அங்கு அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு மாதிரி இல்லத்தைப் பார்வையிட்டார்.
பின்னர், மெரினா கடற்கரையில், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் உள்ள பகுதிகளில் மழைநீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வைப் பொதுமக்களிடையே ஏற்படுத்திடும் வகையில் மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து, குறும்படத்தைப் பார்வையிட்டார்.
மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு
நீர் என்பது வீட்டு உபயோகம், விவசாயம், தொழில்துறை மற்றும் சுற்றுச்சூழல் தேவைகளுக்கு இன்றியமையாத இயற்கை வளமாகும். அதிகரித்துவரும் நீர்த்தேவை, நகரமயமாக்கல், மாறிவரும் மழைப்பொழிவு மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, மழைநீரைச் சேகரித்து முறையாகப் பயன்படுத்துவதும், நிலத்தடி நீர்வளங்களைப் பாதுகாப்பதும் அவசியமாகிறது.
தமிழ்நாடு முழுவதும் மழைநீர் சேமிப்பை மக்கள் இயக்கமாகச் செயல்படுத்தும் நோக்கில், ஏற்கெனவே உள்ள மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகளைப் புதுப்பித்தல், புதிய கட்டமைப்புகளை உருவாக்குதல், நிலத்தடி நீர்வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துதல் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு சிறப்பு இயக்கத்தை முன்னெடுக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, அரசு அலுவலகங்கள், குடியிருப்புகள் மற்றும் பிற கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகளை ஆய்வுசெய்து சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். அரசு அலுவலகங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள், தங்களது கட்டுப்பாட்டிலுள்ள மழைநீர்க் கட்டமைப்புகள் முழுமையாகச் செயல்படும் நிலையில் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். பொதுக் கட்டடங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் வணிகக் கட்டடங்களின் மேற்கூரைகள், நீர்வழிப் பாதைகள், வடிகட்டும் அறைகள், நிலத்தடி நீர் செறிவூட்டும் குழிகள் மற்றும் கிணறுகள் உள்ளிட்ட மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் சம்பந்தப்பட்ட அலுவலர்களால் ஆய்வு செய்யப்படும்.
நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் கட்டட அனுமதி விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள மழைநீர் சேமிப்பு தொடர்பான விதிகள் திறம்படச் செயல்படுத்தப்படும். புதிய கட்டடங்கள் மட்டுமின்றி, ஏற்கெனவே உள்ள வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், நிறுவனங்கள், வணிக வளாகங்கள் மற்றும் தொழிற்சாலைகளிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்த ஊக்குவிக்கப்படும். மேலும், நிலத்தின் தன்மை, நிலத்தடி அமைப்பு மற்றும் நீரியல் சூழலுக்கு ஏற்றவாறு மழைநீர் செறிவூட்டும் அகழிகள், நீர் ஊடுருவும் குழிகள், செறிவூட்டும் கிணறுகள், வண்டல் தடுப்புகள் மற்றும் வடிகட்டும் அமைப்புகள் போன்ற கட்டமைப்புகள் உருவாக்கப்படும்.
அரசுத் துறைகளும், உள்ளாட்சி அமைப்புகளும் தங்களது வளாகங்களில் மழைநீரைச் சேகரித்து, மீண்டும் பயன்படுத்துவதற்கும், நிலத்தடி நீரைச் செறிவூட்டுவதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தொழில்நுட்பரீதியாகச் சாத்தியமுள்ள இடங்களில் புதிய நகர்ப்புற மற்றும் ஊரகக் குடிநீர் வழங்கல் திட்டங்களிலும் மழைநீர் சேமிப்பு நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்படும். மழைநீர் சேமிப்பை மக்கள் இயக்கமாக மாற்றும் வகையில், அரசுத் துறைகள், உள்ளாட்சி அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்போர் நலச் சங்கங்கள், சுயஉதவிக் குழுக்கள், தன்னார்வ அமைப்புகள், தொழிற்சாலைகள் மற்றும் சமூக அமைப்புகள் ஒருங்கிணைந்து மாநில அளவில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு தொடர்பாக, உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்கள் மற்றும் பொறியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், சுயஉதவிக் குழுக்கள், குடியிருப்போர் நலச் சங்கத்தினர் மற்றும் சமூகத் தன்னார்வலர்களுக்குப் பயிற்சி மற்றும் செயல்விளக்க நிகழ்ச்சிகள் நடத்தப்படும். ஒவ்வொரு வீட்டிலும், நிறுவனத்திலும் மழைநீரை அந்தந்த இடத்திலேயே சேகரித்து முறையாகப் பயன்படுத்துவதற்கும், கட்டமைப்புகளைத் தொடர்ந்து பராமரிப்பதற்கும் பொதுமக்கள் மற்றும் நிறுவனத்தினர் ஊக்குவிக்கப்படுவர்.
நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகள், ஏற்கெனவே உள்ள மழைநீர்க் கட்டமைப்புகள், புதுப்பிக்கப்பட்ட மற்றும் பழுதுபார்க்கப்பட்ட கட்டமைப்புகள், புதிதாக உருவாக்கப்பட்ட கட்டமைப்புகள் மற்றும் மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்த பதிவுகளைப் பராமரிக்க வேண்டும். சாத்தியமான இடங்களில், பணிகளின் முன்னேற்றம் குறித்த புகைப்படங்கள், புவியிடக் குறியீடுகள் மற்றும் இணையவழி அறிக்கை முறைகள் மூலம் ஆவணப்படுத்தப்படும்.
மழைநீர் சேமிப்புப் பணிகளில் சிறப்பாகச் செயல்படும் மாவட்டங்கள், நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகள், பள்ளிகள், கல்லூரிகள், அரசு நிறுவனங்கள், குடியிருப்போர் நலச் சங்கங்கள் மற்றும் சமூக அமைப்புகளுக்கு உரிய அங்கீகாரங்கள் மற்றும் விருதுகள் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மழைநீர் சேமிப்பு, நிலத்தடி நீர் செறிவூட்டல், நீர்ப்பிடிப்புப் பகுதிகள் மேம்பாடு, நகர்ப்புற நீர் மேலாண்மை, ஊரக மேம்பாடு மற்றும் காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்துதல் தொடர்பாக, நடைமுறையில் உள்ள திட்டங்களுடன் இவ்வியக்கம் ஒருங்கிணைக்கப்படும்.
இதன்மூலம் கிடைக்கக்கூடிய வளங்களைத் திறம்படப் பயன்படுத்துவதுடன், ஒரே பணியை மீண்டும் மீண்டும் மேற்கொள்வதும் தவிர்க்கப்படும். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, இவ்வியக்கத்திற்கான முதன்மைத் துறையாகச் செயல்பட்டு, தொடர்புடைய அனைத்துத் துறைகள், மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து செயல்படுத்தல் மற்றும் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளும்.
பொதுமக்கள் தங்களது வீடுகளிலும், நிறுவனத்தினர் தங்களது நிறுவனங்களிலும் மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகளைச் சீரமைத்து, முறையாகப் பராமரித்து, மழைநீரைச் சேகரித்துப் பயன்படுத்துவதன் மூலம் நீர்வளப் பாதுகாப்பை உறுதிசெய்து, அரசின் மழைநீர் சேமிப்பு முன்னெடுப்புகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
இந்நிகழ்ச்சியில், பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன், செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் ரா. குமார், நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் மரிய வில்சன், தலைமைச் செயலாளர் சாய்குமார் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.