

முதல்வர் விஜய் | கோப்புப் படம்
சென்னை: தமிழக முதல்வர் விஜய் நாளை (திங்கள் கிழமை) திருச்சி கிழக்கு தொகுதிக்கு நன்றி தெரிவிக்க வரும் நிகழ்ச்சியில் கியூஆர் குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 5000 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது என தவெக பொதுச்செயலாளரும், அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத் தலைவர், தமிழக முதல்வர் விஜய் கலந்துகொள்ளும், திருச்சிராப்பள்ளி மாவட்ட மக்கள் சந்திப்பு மற்றும் திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி, நாளை (01.06.2026) திங்கள்கிழமை, திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் மாலை 4.15 மணி முதல் நடைபெற உள்ளது.
காவல் துறை அனுமதிக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க, அனுமதி பெற்றவர்களுக்கான நிகழ்ச்சியாக மாவட்ட நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கியூஆர் குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 5000 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது. கியூஆர் குறியீடு அனுமதிச் சீட்டானது, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, பாதுகாப்பு கருதி, கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் உள்ளிட்டவர்களுக்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான கியூஆர் குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்படவில்லை. எனவே இவர்கள் யாரும் கண்டிப்பாக வர வேண்டாம்.
காவல்துறையின் வழிகாட்டுதலின்படி, பங்கேற்பாளர்கள் தங்களது வாகனங்களை நிறுத்தும் போது, அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாதவாறு நிறுத்த வேண்டும். கியூஆர் குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு, நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளவர்களுக்குத் தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அனுமதிச் சீட்டு இல்லாத தவெகவினரும் பொதுமக்களும் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே அவர்கள் இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி, சமூக வலைத்தள நேரலைகளில் கண்டு, கியூஆர் குறியீடு அனுமதிச் சீட்டு பெற்றிருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.' எனத் தெரிவித்துள்ளார்.