

சென்னை: ‘கோவை சிறுமி கொலை வழக்கில் தொடர்புடையதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்துத் தீவிர மற்றும் விரைவான விசாரணை மேற்கொண்டு, குற்றப்பத்திரிகையை உடனடியாக தாக்கல் செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்” என்று முதல்வர் விஜய் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “கோயம்புத்தூரில் நேற்று 10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூர சம்பவம் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. இத்தகைய மனிதநேயமற்ற மற்றும் மன்னிக்க முடியாத குற்றச் செயல்கள் நமது சமூகத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது.
தங்கள் உயிருக்குயிரான குழந்தையைப் பிரிந்து வாடும் சிறுமியின் குடும்பத்தைச் சார்ந்த சொந்தங்களுடன் எனது ஆழ்ந்த துயரத்தைப் பகிர்ந்துகொள்கிறேன்.
இந்த வழக்கில் தொடர்புடையதாக இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்துத் தீவிர மற்றும் விரைவான விசாரணை மேற்கொண்டு, குற்றப்பத்திரிகையை உடனடியாக தாக்கல் செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் இத்தகைய அராஜக செயல்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை பெற்றுத்தர தமிழ்நாடு அரசு உறுதியுடன் செயல்படும். இதற்கான உடனடி மற்றும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நடந்தது என்ன?
கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் வசிக்கும் தம்பதியின் 10 வயது மகள், நடப்புக் கல்வியாண்டில் 5-ம் வகுப்புக்கு செல்ல இருந்தார். நேற்று முன்தினம் மாலை வீட்டருகே உள்ள கடைக்குச் சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை. மளிகைக் கடைக்குச் சென்று விசாரித்தபோது, இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சிறுமியை அழைத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, பெற்றோர் அளித்த புகாரின்பேரில் சூலூர் போலீஸார் சிறுமியை தேடி வந்தனர்.
இந்நிலையில், கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள குளக்கரையில் ஒரு சிறுமியின் சடலம் கிடப்பதாக நேற்று இரவு சூலூர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸார் அங்கு சென்று சடலத்தை மீட்டு விசாரணை நடத்தியதில், உயிரிழந்தது காணாமல் போன சிறுமி என தெரியவந்தது. சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி சென்று விசாரித்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.