மதுரையில் புதுப்பிக்கப்பட்ட காந்தி நினைவு அருங்காட்சியகத்தை முதல்வர் விஜய் திறந்து வைத்தார்

மதுரையில் புதுப்பிக்கப்பட்ட காந்தி நினைவு அருங்காட்சியகத்தை
முதல்வர் விஜய் திறந்து வைத்தார்
Updated on: 
2 min read

மதுரை: மதுரையில் ரூ.10.25 கோடியில் புனரமைக்கப்பட்ட காந்தி நினைவு அருங்காட்சியகத்தை தமிழக முதல்வர் விஜய் இன்று திறந்து வைத்தார். பின்பு அருங்காட்சியகத்துக்குள் காந்தியடிகள் பயன்படுத்திய பொருட்களை பார்வையிட்டார்.

மகாத்மா காந்தியடிகள் மறைவுக்குப் பின்பு அவரது தியாகம், நினைவைப் போற்றும் வகையில் நாட்டிலேயே முதல் முறையாக மதுரையில்தான் காந்தி நினைவு அருங்காட்சியகம் மதுரை தமுக்கம் பகுதியில் அமைக்கப்பட்டது. இதற்கு முன்னர் இந்த இடம் 1670-ல் ராணி மங்கம்மாள் கட்டிய கோடை கால அரண்மனையாக இருந்தது.

பின்பு ஆங்கிலேயர் ஆட்சியில் மாவட்ட ஆட்சியர்கள், நீதிபதிகள் இல்லமாகவும் இருந்தது. மொத்தம் 13 ஏக்கர் பரப்புள்ள இந்த இடத்தை, தமிழக அரசு 1955-ம் ஆண்டு அகில இந்திய காந்தி நினைவு நிதி வசம் ஒப்படைத்தது. இங்கு அமைக்கப்பட்ட காந்தி நினைவு அருங்காட்சியகத்தை 14.4.1959-ல் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு திறந்து வைத்தார்.

இந்த அருங்காட்சியகத்தில் காந்தியடிகள் துப்பாக்கியால் சுட்டபோது அணிந்திருந்த ரத்தம் தோய்ந்த ஆடைகள், கண்ணாடி, காலணிகள் உள்ளிட்ட 14 வகையான பொருட்கள் பாதுகாக்கப்படுகின்றன.

இந்த வளாகத்தில் காந்தி குடில், காந்தி அஸ்திபீடம் ஆகியவையும் உள்ளன. இதனைக் காண வெளிநாட்டு பயணிகள், வெளி மாநிலம் மற்றும் தமிழகத்தை சேர்ந்த பல்வேறு மாவட்டங்களிலிருந்து தினமும் வந்து பார்வையிடுவர்.

காந்தி நினைவு அருங்காட்சியகம் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையின்படி அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் 15.8.2022 சுதந்திர தினத்தன்று ரூ.6 கோடியில் காந்தி நினைவு அருங்காட்சியகம் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் என அறிவித்தார். அதன்படி, அதே ஆண்டில் அக்டோபர் 2-ம் தேதி பொதுப்பணித் துறை சார்பில் பணிகள் தொடங்கின.

புனரமைப்பு பணிகளில் சுதந்திரப் போராட்ட வரலாற்றை அறிந்துகொள்ள தொடுதிரை வசதி, காந்தியின் வாழ்க்கை வரலாற்றை அறிந்துகொள்ள ஒலி-ஒளி காட்சி அரங்கம், காந்தியும் மதுரையும் என்ற தலைப்பில் ஆவணப்படத்தை காணும் வகையில் ஏவி தியேட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் டிஜிட்டல் புகைப்படங்கள், டிஜிட்டல் திரைகள், மற்றும் தமிழ் பெயர்ப்பு போன்ற நவீன வசதிகளுக்காக திட்ட மதிப்பீடு ரூ.10.25 கோடியாக மாற்றப்பட்டன.

கடந்த திமுக ஆட்சியில் பணிகளை முடித்து திறக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பணிகள் முடிவடையாததால் திறக்கப்படவில்லை. சுமார் ஓராண்டுக்கு முன்பே அருங்காட்சியகப் பணிகள் முடிவடைந்து தயார் நிலையில் இருந்தன. சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்புக்கு பின்பு திறப்பு விழா தள்ளிப்போனது. ஆட்சி மாற்றத்திற்கு பின்பு தவெக தலைமையிலான ஆட்சி அமைந்தது.

கடந்த ஆக.15 சுதந்திர தினத்தன்று திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், தமிழக முதல்வர் மதுரையின் வருகையின்போது திறக்கப்படும் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைக்க மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு தமிழக முதல்வர் விஜய் வருகைதந்தார்.

அதனைத் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்ட காந்தி நினைவு அருங்காட்சியகத்தை மதியம் 1.10 மணியளவில் திறந்து வைத்தார். அருங்காட்சியத்திற்குள் சென்று காந்தியடிகள் பயன்படுத்திய பொருட்கள் பார்வையிட்டார். அங்கு மதுரையும் காந்தியும் என்ற தலைப்பிலான ஆவணப்படத்தையும் பார்வையிட்டார்.

மதுரையில் புதுப்பிக்கப்பட்ட காந்தி நினைவு அருங்காட்சியகத்தை
முதல்வர் விஜய் திறந்து வைத்தார்
“தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மீது வழக்குப் பதிந்து கைது செய்ய வேண்டும்” - ‎ப.சிதம்பரம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in