

படம்: எஸ்.குரு பிரசாத்
மேட்டூர்: தமிழக முதல்வர் விஜய் முதல் முறையாக மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்காக தண்ணீரை திறந்து வைத்தார்.
மேட்டூரில் காவிரியின் குறுக்கே மேட்டூர் அணை கட்டப்பட்டுள்ளது. தமிழகத்தின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ள மேட்டூர் அணை முழுக் கொள்ளளவை எட்டும் போது 93.47 டிஎம்சி நீர் இருப்பு இருக்கும் .
மேட்டூர் அணையில் திறக்கப்படும் நீரைப் பயன்படுத்தி சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சி உட்பட 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 17.15 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகின்றன. மேலும் 16 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கிறது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் குறுவை, சம்பா, தாளடி நெல் சாகு படி மேற்கொள்ளப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி முதல் ஜனவரி 28-ம் தேதி வரை 230 நாட்களுக்கு மொத்தம் 330 டிஎம்சி நீர் தேவைப்படும். அணையில் நீர் இருப்பை பொறுத்து, ஜூன் 12-ம் தேதிக்கு முன்போ, அல்லது காலதாமதமாகவோ அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
காவிரி டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்க வேண்டுமானால் அணையில் குறைந்தபட்சம் 90 அடிக்கு நீர் இருந்தால் மட்டுமே சாகுபடிக்கு முழுமையாக நீர் திறக்க முடியும். நடப்பாண்டில் அணையில் போதுமான நீர்இருப்பு இல்லாத காரணத்தால், பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முடியவில்லை. கர்நாடகவில் உள்ள கபினி, கேஆர்எஸ் அணைகளிலிருந்து உபரிநீர் திறப்பால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
அணையின் நீர்மட்டம் 91 அடியை எட்டியுள்ள நிலையில், இன்று (1-ம் தேதி) முதல் 45 நாட்களுக்கு தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது. இதற்காக சென்னையில் இருந்து சேலத்திற்கு தனி விமானம் மூலமாக முதல்வர் விஜய் வந்தார்.
பின்னர், சாலை மார்கமாக மேட்டூர் அணைக்கு வந்த நிலையில் காலை 11.35 மணியளவில் மேட்டூர் அணையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பிரதான 8 கண் மதகுகளை இயக்கி டெல்டா பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைத்தார்.
அணையிலிருந்து சீறிப்பாய்ந்து வெளியேறிய நீரில் நெல்தானியங்கள், மலர்களைத் தூவி வரவேற்றார். முதற் கட்டமாக, விநாடிக்கு 3,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இது படிப்படியாக இன்று மாலைக்குள் வினாடிக்கு 7 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்படுகிறது.
மேட்டூர் அணையின் 93 ஆண்டு கால வரலாற்றில், டெல்டா பாசனத்துக்கு காலதாமதமாக நீர் திறக்கப்படுவது இது 62-வது முறையாகும். ஜூன் 12-ம் தேதி முன்பு 11 முறையும், ஜூன் 12-ம் தேதி 20 முறையும் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாத்தில் தண்ணீர் திறப்பது 4-வது முறையாகும் என்பது குறிப்பிடதக்கது.
முன்னதாக, சேலம் விமான நிலையத்தில் அமைச்சர்கள், மாவட்ட நிர்வாகம், காவல் துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் முதல்வர் விஜயை வரவேற்றுனர். தொடர்ந்து, மேட்டூருக்கு வரும் வழியில் சாலையில் காத்திருந்த மக்கள், முதல்வர் விஜய்க்கு மலர்தூவி உற்சாக வரவேற்றனர். தொடர்ந்து, அணையின் வலது கரை பகுதியில் காவல் துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.
நீர்மின் நிலையத்தில் ஆய்வு: அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறத்து வைத்த பிறகு, நீர்வளத்துறை சார்பில் அமைக்கப்பட்ட புகைப்பட கண்காட்சியை முதல்வர் விஜய் பார்வையிட்டார். பின்னர், அணையின் சுரங்க பாதை பகுதியில் நடந்து சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், அணை நீர் மின் நிலைத்திற்கு மின் உற்பத்தி நடைபெறுவது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
மின் உற்பத்தி தொடக்கம்: மேட்டூர் அணையில் இருந்து. துவக்கத்தில் விநாடிக்கு 3,000 கன அடி வீதம் திறக்கப்பட்ட தண்ணீர் படிப்படியாக வினாடிக்கு 7,000 கனஅடி வரை அதிகரிக்கப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் சுரங்க மின் நிலையம் அணை மின் நிலையம் மற்றும் 7 கதவணைகள் மூலம் மின்சாரம் உற்பத்தி தொடங்கியுள்ளது.
மேட்டூர் அணையின் வலது கரையில் நடைபெற்ற இவ் விழாவில் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த், போக்குவரத்து துறை அமைச்சர் பார்த்திபன், நீர்வளத்துறை செயலாளர் பிரசாந் வடநேரே, மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், எம்எல்ஏக்கள் சிவக்குமார், லட்சுமணன், பழனிவேல், மண்டல தலைமை பொறியாளர் ஜெயக்குமாரி, மற்றும் விவசாயிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.