“மன்னர்கள் செய்த பணிகளைப்போல முதல்வர் ஸ்டாலின் செய்கிறார்” - மா.சுப்பிரமணியன்

“மன்னர்கள் செய்த பணிகளைப்போல முதல்வர் ஸ்டாலின் செய்கிறார்” - மா.சுப்பிரமணியன்
Updated on
2 min read

சென்னை: “ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு மன்னர்கள் மக்களுக்கு செய்த பணிகளைப்போல், இன்றைக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பல்லாயிரம் கோடி ரூபாயிலான பல நூற்றாண்டு நிலைத்திருக்கும் பணிகளை செய்துகொண்டிருக்கிறார்” என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சைதாப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன் இன்று (12-4-2026) காலை 6.30 மணியளவில் ரேஸ்கோஸ் மைதானத்தில் நடைப்பயிற்சியின்போது செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிண்டி ரேஸ்கோர்ஸில் 160.86 ஏக்கரில் 250 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்து இங்கு குதிரைப்பந்தயம் களைக்கட்டி வந்தது.

இந்த குதிரைப்பந்தயத்தினால் பெரிய அளவில் பாதிக்கப்படுபவர்கள் ஏழை எளியவர்கள் மட்டுமே. ஏராளமான பேர் இந்த குதிரைப்பந்தயத்தில் அவர்களுடைய ஒட்டுமொத்த வருமானத்தையும் இழந்து, உயிரிழந்தவர்கள் ஏராளம். மனநோயாளிகளாக அலைந்துகொண்டிருப்பவர்களும் ஏராளம். அந்த வகையில் இந்த கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானம் பலரை சீரழித்தது.

1974ஆம் ஆண்டு கருணாநிதி ஆக.17ஆம் தேதி கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இனிமேல் குதிரைப்பந்தயம் நடக்காது என்கிற வகையில் ஒரு சட்டத்தைக் கொண்டுவந்தார். குதிரைப்பந்தயத்துக்கு தடை விதிக்கப்பட்டதன் விளைவாக, குதிரைப்பந்தயம் நிறுத்தப்பட்டது என்பதற்கு அடையாளமாக, இன்றும் அண்ணா மேம்பாலம் அருகே நினைவுச்சின்னமாக குதிரை சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

இங்கே இருந்த நிர்வாகத்தால் நீதிமன்றங்களுக்கு சென்று வழங்கு நடத்தி, குதிரைப்பந்தயத்தை மீண்டும் தொடர்ந்து கொண்டிருந்தனர். முதல்வர் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன், கிண்டியில் இருக்கிற ரேஸ்கோர்ஸ் மைதானத்தை கையப்படுத்தி இங்கே ஒரு சுற்றுச்சூழல் பூங்காவிற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

சென்னையின் பிரதான மையப்பகுதியில் அமைந்திருக்கிற 160.86 ஏக்கர் பரப்பளவிலான இந்த இடம் மிக நீண்ட காலமாக அரசின் இந்த இடத்திற்கு குத்தகைத் தராமல் ரூ.700 கோடி ரூபாய் வரை இந்த நிர்வாகத்தினர் பாக்கி வைத்திருந்தார்கள். இந்த குத்தகைப் பாக்கியும் தராமல் குதிரைப் பந்தயத்தை நடத்தி வந்தனர். முதல்வர் இந்த இடத்தை கையப்படுத்தி ஏராளமான ஆக்கப்பூர்வமானப் பணிகளுக்கு பயன்படுத்தி வருகிறார். அதற்கான போராட்டங்கள் கொஞ்சம், நஞ்சமல்ல.

இந்தப் பணிகள் முழுமையடைந்தப் பிறகு இந்த இடத்தை எடுத்த உடனே இங்கே உபரியாகிற மழைநீரால் இங்கு இருக்கிற குடியிருப்புதாரர்களுக்கு ஏற்படுகிற பாதிப்பை உணர்ந்து ரூ.28 கோடி லிட்டர் தண்ணீரைத் தேக்கி வைக்கிற அளவுக்கு ஆறு குளங்களை வெட்டினார். அந்தக் காலத்தில்தான் மன்னர்கள்தான் குளத்தை வெட்டினார்கள் என்று சொல்வார்கள்.

ஆனால் இன்றைக்கு தமிழ்நாட்டின் முதல்வர் சென்னையின் பிரதான இடத்திலேயே ஆறு குளங்களை வெட்டினார். அதுமட்டுமல்ல இந்த குளங்களிலிருந்து உபரிநீர் வெளியேறுவதற்கு இந்த மைதானத்தைச் சுற்றி ரூ.52 கோடி மதிப்பீட்டில் மழைநீர்வடிகால்வாய்கள் கட்டும் பணிகளும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இதனால் எதிர்காலத்தில் எவ்வளவு பெரிய மழைநீர் பாதிப்பு வந்தாலும், சைதாப்பேட்டை, மடுவின்கரை, கிண்டி, வேளச்சேரி, ஆலந்தூர் போன்ற பகுதி மக்களுக்கு, வெள்ள அபாயம் இருக்காது. இன்னொன்று இவ்வளவு குளங்கள் இங்கு வெட்டப்படுவதால், அதில் மழைநீர் தேங்கி இருப்பதால், இங்கு வசிக்கிற குடியிருப்புத்தாரர்களுக்கு மிகப்பெரிய வறட்சி வந்தால்கூட, அதை தாங்குகிற நிலையில் இருக்கும். 118 ஏக்கரில் நடைபெற்றுக்கொண்டிருக்கிற பணிகளைத் தொடர்ந்து, 160 ஏக்கரும், இன்றைக்குப் பயன்பாட்டிற்கு வர இருக்கிறது. சென்னையின் மையப் பகுதியில் 118 ஏக்கரில் ஒரு சுற்றுச்சூழல் பூங்கா என்பது யாரும் நினைத்தேப் பார்க்க முடியாது. இந்த மகத்தான சாதனையை முதல்வர் செய்திருக்கிறார்” என்று தெரிவித்தார்.

“மன்னர்கள் செய்த பணிகளைப்போல முதல்வர் ஸ்டாலின் செய்கிறார்” - மா.சுப்பிரமணியன்
“தவெக ஆட்சியில் ஏஐ அமைச்சகம் உருவாக்கப்படும்” - கன்னியாகுமரியில் விஜய் வாக்குறுதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in