

கோப்புப் படம்
புதுச்சேரி: பதவியேற்பு தினத்தை முன்னிட்டு, அமைச்சர்களை முடிவு செய்ய முதல்வர் ரங்கசாமி சேலம் அப்பா பைத்தியம் சாமி ஜீவசமாதிக்கு புறப்பட்டார்.
புதுவை முதல்வர் ரங்கசாமி தீவிரமான முருக பக்தர். ஆன்மிகவாதியான இவர், ஜோதிட அடிப்படையில் முடிவுகளை எடுப்பார். தனது ஆன்மிக குருவாக அப்பா பைத்தியம் சாமிகளை ஏற்றுள்ளார். அவருக்காக கோரிமேட்டில் தனது வீட்டின் வளாகத்திலேயே திருக்கோயில் கட்டியுள்ளார். சனிக்கிழமை தோறும் இக்கோயிலில் பூஜை செய்து அன்னதானம் வழங்கப்படுகிறது.
வழக்கமாக தேர்தல் காலங்களில் முதல்வர் ரங்கசாமி சேலத்திலுள்ள ஸ்ரீ சற்குரு அப்பா பைத்தியம் சாமிகளின் ஜீவ சமாதிக்கு சென்று வழிபடுவார். அங்குதான் வேட்பாளர்கள், கூட்டணி, வேட்பு மனு தாக்கல் தேதி முடிவு செய்தார். அதேபோல் திருச்செந்தூர் முருகன் கோயில், மதுரை மீனாட்சி கோயிலுக்கும் சென்று வழிபட்டார். தேர்தலுக்கு முன்பு சென்று முடிவுகளை எடுத்து தற்போது தேர்தலில் வென்று 5-வது முறையாக முதல்வராகிறார்.
அவருடன் பேச மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆகியோர் புதுச்சேரி வந்து நேரம் கேட்டுள்ள நிலையில் இன்று காலை முதல்வர் ரங்கசாமி ஆன்மிக பயணம் புறப்பட்டார். அவருடன் என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள், நிர்வாகிகளும் புறப்பட்டனர். இதுதொடர்பாக என்ஆர் காங்கிரஸ் தரப்பில் கேட்டதற்கு, “சேலம் அப்பா பைத்திய சாமி ஜீவசமாதி சென்று வணங்குகிறார்.
அங்குள்ள அப்பா பைத்தியம் சாமிக்கு பிடித்தமான மேரி பிஸ்கெட், ஜாங்கிரி ஆகியவற்றை படைத்து வழிபடுவார். அங்கு பதவியேற்பு நாள், நேரம் கணிக்கிறார். அமைச்சர்களையும் முடிவு செய்யும் முக்கிய முடிவுகளை எடுக்கிறார்.
தொடர்ந்து பொள்ளாச்சி வேட்டைக்காரபுத்தூர் சென்று அழுக்கு சித்தரையும் வழிபடுகிறார். இதன்பிறகு புதுச்சேரி திரும்புகிறார். அடுத்து திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கும் செல்லவும் வாய்ப்புள்ளது.” என்றனர்.