

சென்னை: சென்னையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தபோது கண்டெடுத்த 45 சவரன் தங்க நகைகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் பத்மாவை நேரில் அழைத்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின், ரூ.1 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெருநகர சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர் பத்மா நேற்று (11.1.2026) சென்னை, தியாகராய நகர், வண்டிக்காரன் சாலையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தபோது கண்டெடுத்த 45 சவரன் தங்க நகைகளை பாண்டிபஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்து, பிறருக்கு முன்னுதாரணமாக திகழ்ந்ததை தமிழக முதல்வர் ஸ்டாலின் பாராட்டி, அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து, பரிசுத்தொகையாக ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலையினை வழங்கினார்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை திருவல்லிக்கேணி, கிருஷ்ணாம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பத்மா (50). இவர் சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளராக பணி செய்து வருகிறார். இவர் நேற்று தி.நகரில் உள்ள மகாராஜா சந்தானம் தெருவில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த போது, அங்கு குப்பையோடு கிடந்த கவர் ஒன்றை எடுத்து பார்த்தபோது, ஐஸ்கிரீம் டப்பாவுக்குள் 45 பவுன் தங்க நகைகள் இருப்பது தெரிந்தது.
உடனடியாக அதனை தனது மேற்பார்வையாளர் மூலமாக பாண்டி பஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் சோதனையில் அவை 45 பவுன் தங்க நகைகள் என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் மேற்கொண்ட விசாரணையில், நங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் நகைகள் அவை என்பது தெரியவந்தது.