புதிய சார்பதிவாளர் அலுவலகங்கள், வணிக வரி அலுவலக கட்டிடங்களை திறந்து வைத்தார் முதல்வர்!

புதிய சார்பதிவாளர் அலுவலகங்கள், வணிக வரி அலுவலக கட்டிடங்களை திறந்து வைத்தார் முதல்வர்!
Updated on
2 min read

சென்னை: வணிகவரி துறை சார்பில் ரூ.34.98 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 5 வணிக வரி அலுவலகக் கட்டடங்கள், பதிவுத்துறை சார்பில் ரூ.22.12 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 12 சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள் உள்ளிட்டவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘முதல்வர் மு.க. ஸ்டாலின் 13.02.2026 அன்று தலைமைச் செயலகத்தில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பில் 57 கோடியே 10 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 5 வணிகவரி அலுவலகக் கட்டடங்கள், 12 சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள் மற்றும் திருப்பூர் பதிவு மாவட்டத்தில் பொங்கலூர், தாம்பரம் பதிவு மாவட்டத்தில் வண்டலூர், கள்ளக்குறிச்சி பதிவு மாவட்டத்தில் வாணாபுரம் ஆகிய புதிதாக உருவாக்கப்பட்ட மூன்று புதிய சார்பதிவாளர் அலுவலகங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

மாநிலத்தின் வரி வருவாயில் மூன்றில் இரண்டு பங்குக்கு மேல் பங்களிக்கும் முக்கிய துறையாக வணிகவரித்துறை விளங்கி வருவதோடு, வரி வசூல் மற்றும் வரி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனையும் உறுதி செய்து வருகிறது. மேலும், பதிவுத்துறை வாயிலாக மக்கள் தங்கள் சொத்துக்களின் மீதான உரிமையை தமது பெயரில் பதிவு செய்தல், திருமணத்தைப் பதிவு செய்தல், சங்கங்கள், சீட்டுகள் மற்றும் கூட்டாண்மை நிறுவனங்கள் பதிவு செய்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயல்பாடுகளை மேலும் மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

வணிகவரித் துறை சார்பில் திருச்சிராப்பள்ளி ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகக் கட்டடம், அருப்புக்கோட்டையில் உதவி ஆணையர் அலுவலகக் கட்டடம், மன்னார்குடி, நாகப்பட்டினம் மற்றும் கரூர்-4 ஆகிய இடங்களில் மாநிலவரி அலுவலர் அலுவலகக் கட்டடங்கள் என மொத்தம் 34 கோடியே 98 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 5 வணிகவரித் துறை கட்டடங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

வணிகவரி மற்றும் பதிவுத்துறை மானியக் கோரிக்கையில் புதிய சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள் கட்டப்படும் என்ற அறிவிப்பிற்கிணங்க, தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை மற்றும் பாபநாசம், திருவாரூர் மாவட்டம் நன்னிலம் மற்றும் நீடாமங்கலம், நாமக்கல் மாவட்டம் நாமக்கல் 2 எண் இணை சார்பதிவாளர் அலுவலகம், ராசிபுரம் மற்றும் நாமகிரிப்பேட்டை, திண்டுக்கல் மாவட்டம் – நிலக்கோட்டை, கள்ளக்குறிச்சி மாவட்டம் – எலவனாசூர்கோட்டை, தூத்துக்குடி மாவட்டம் - முறப்பநாடு தென்காசி மாவட்டம் – பண்மொழி, மயிலாடுதுறை மாவட்டம் – சீர்காழி ஆகிய இடங்களில் 22 கோடியே 12 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 12 சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்களை முதல்வர் திறந்து வைத்தார்.

முதல்வர் ஸ்டாலின் மொத்தம் 57 கோடியே 10 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வணிகவரி மற்றும் பதிவுத் துறைக்கான புதிய கட்டடங்களை திறந்து வைத்தார். 2024-2025 ஆம் ஆண்டிற்கான வணிகவரி மற்றும் பதிவுத்துறை மானியக் கோரிக்கையின் அறிவிப்பை தொடர்ந்து, தாம்பரம் பதிவு மாவட்டம், கூடுவாஞ்சேரி சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள 40 கிராமங்களில் 18 கிராமங்களை பிரித்து அந்த 18 கிராமங்களை உள்ளடக்கி தாம்பரம் பதிவு மாவட்டத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட வண்டலூர் சார்பதிவாளர் அலுவலகம்;

2025-2026 ஆம் ஆண்டிற்கான வணிகவரி மற்றும் பதிவுத்துறை மானியக் கோரிக்கையின் அறிவிப்பை தொடர்ந்து, கள்ளக்குறிச்சி வருவாய் மாவட்டம், வாணாபுரம் வருவாய் வட்டத்தில் உள்ள 85 கிராமங்களில் 32 கிராமங்களை பிரித்து அந்த 32 கிராமங்களை உள்ளடக்கி கள்ளக்குறிச்சி பதிவு மாவட்டத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட வாணாபுரம் சார்பதிவாளர் அலுவலகம்;

திருப்பூர் பதிவு மாவட்டம், பல்லடம் சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள 39 கிராமங்களில் 11 கிராமங்களை பிரித்து அந்த 11 கிராமங்களை உள்ளடக்கி திருப்பூர் பதிவு மாவட்டத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட பொங்கலூர் சார்பதிவாளர் அலுவலகம் ஆகிய புதிதாக உருவாக்கப்பட்ட மூன்று சார்பதிவாளர் அலுவலகங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இப்புதிய சார்பதிவாளர் அலுவலகங்கள் திறக்கப்படுவதன் மூலம் பொதுமக்களுக்கு விரைவான மற்றும் சிறப்பான சேவைகளை அளிக்க இயலும்.

இந்த நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய சார்பதிவாளர் அலுவலகங்கள், வணிக வரி அலுவலக கட்டிடங்களை திறந்து வைத்தார் முதல்வர்!
சமரச சுத்த சன்மார்க்க பேரணி - கொடி அசைத்து தொடங்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in