

சென்னை: பயணிகளின் மருத்துவ தேவைக்காக, சென்னை எழும்பூர், தாம்பரம், காட்பாடி, செங்கல்பட்டு ரயில் நிலையங்களில் மருந்தகங்களுடன் கூடிய அவசர மருத்துவ வசதிகளை ஏற்படுத்த, சென்னை ரயில்வே கோட்டம் ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.
தெற்கு ரயில்வேயில் முக்கிய கோட்டமாக, சென்னை ரயில்வே கோட்டம் உள்ளது. இந்த கோட்டத்தில் சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம், காட்பாடி, திருவள்ளூர் உட்பட பல முக்கிய ரயில் நிலையங்கள் உள்ளன.
இந்த ரயில் நிலையங்களை நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர். இங்கு வருபவர்களுக்கு திடீரென அவசர மருத்துவ உதவி தேவை என்றால், ரயில்வே உதவி எண், ரயில் மதத் என்ற இணையதளம் மூலமாக தொடர்பு கொண்டு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சில முக்கிய ரயில் நிலையங்களில் தனியாருடன் இணைந்து பயணிகளுக்கு முதலுதவி மற்றும் ஆம்புலன்ஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், முக்கிய ரயில் நிலையங்களில் மருத்துவ வசதி ஏற்படுத்த கோரிக்கை விடுக்கப்படுகிறது.
இந்நிலையில், பயணிகளுக்கு அவசர மருத்துவ தேவைக்காக, சென்னை எழும்பூர், தாம்பரம், காட்பாடி, செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் மருந்தகங்களுடன் கூடிய அவசர மருத்துவ வசதிகளை ஏற்படுத்த சென்னை ரயில்வே கோட்டம் ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.
இதுகுறித்து, சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது: சென்னை எழும்பூர், தாம்பரம், காட்பாடி, செங்கல்பட்டு ஆகிய 4 ரயில் நிலையங்களில் 24 மணி நேரமும் இயங்கும் மருந்தகங்களுடன் கூடிய அவசர மருத்துவ அறைகள் செயல்படுவதற்கும், பராமரிப்பதற்கும் தகுதியான நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தப் புள்ளி வரவேற்கப்படுகிறது.
பயணிகள் மற்றும் ரயில் நிலையத்தைப் பயன்படுத்துபவர்களுக்குத் தேவையான அவசர மருத்துவ உதவிகளை உடனுக்குடன் வழங்குவதே இதன் நோக்கமாகும்.
இந்த மருத்துவ அறைகளில் பயிற்சி பெற்ற மருத்துவப் பணியாளர்கள், முதலுதவி வசதிகள், அவசர சிகிச்சை ஆதரவு, அத்தியாவசிய மருந்துகள், ஆம்புலன்ஸ் சேவை மற்றும் உயிர் காக்கும் மருத்துவக் கருவிகள் ஆகியவை 24 மணி நேரமும் தடையின்றி கிடைக்க வழிவகை செய்யப்படும்.
இத்திட்டத்துக்கான தகுதியான மருத்துவமனைகள், சுகாதார சேவை நிறுவனங்கள் மற்றும் தேவையான அனுபவமும், சட்டப்பூர்வ உரிமங்களும் கொண்ட மருத்துவ முகமைகள் இந்தத் திறந்தநிலை மின்-ஒப்பந்தப் புள்ளியில் பங்கேற்கலாம்.
இந்த ஒப்பந்தப் புள்ளி மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்கள், அதிகப்படியான பயணிகள் வந்து செல்லும் முக்கிய ரயில் நிலையங்களில் தங்களின் பிராண்ட் அடையாளத்தை தொடர்ந்து வெளிப்படுத்திக்கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாகும்.
விருப்பமுள்ள ஏலதாரர்கள் இந்திய ரயில்வேயின் மின்-கொள்முதல் அமைப்பு இணையதளமான www.ireps.gov.in மூலம் ஜூன் 1-ம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் ஒப்பந்தப் புள்ளிகளைச் சமர்ப்பிக்கலாம்.
இது தொடர்பான கூடுதல் விவரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு 80721 14520 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.