

சென்னை: மாநகராட்சி சார்பில் சென்னையில் 55 குளிர் கூரைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னையில் மேற்கொள்ளப்பட்ட முன்னோடி செயல்பாடுகளின் அனுபவத்தின் அடிப்படையில், பள்ளிகளில் குளிர் கூரை பூச்சு வேலைகள், வகுப்பறைகள் மற்றும் கூரைகளின் வெப்பநிலையை கணிசமாக குறைத்துள்ளன.
இந்த திட்டம் தற்போது தமிழ்நாடு காலநிலை மாற்றப் பணியின் ஒரு பகுதியாக விரிவு செய்யப்படுகிறது. மாநகராட்சியின் 49 பள்ளிகள், 6 அரசு பள்ளிகள் என மொத்தம் 55 பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் 5 அரசுப் பள்ளிகளில் குளிர் கூரை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பள்ளிகளில் அதிக ஒளி பிரதிபலிக்கும் கூரையை குளிர் கூரையாக உருவாக்குவதன் மூலம் வெப்ப அழுத்தத்தை குறைத்து, மின்சார தேவையை குறைப்பதற்கும், அரசு பள்ளி கட்டமைப்பில் காலநிலைச் செயல்பாடுகளை மையப்படுத்துவதற்கும் உதவியாக உள்ளது.
இதுதொடர்பாக மாநகராட்சிப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கான பயிற்சிக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் ஆணையர் சமீரன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இணை ஆணையர் (கல்வி) க.கற்பகம், தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவன மேலாண்மை இயக்குநர் ஆஷா அஜித், முதன்மை செயல் அலுவலர் பகன் ஜக்தீஷ் சுதாகர், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தின் உதவி திட்ட இயக்குநர் துஷ்கர் ஹரி ஷிண்டே உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.