படம்: எல்.சீனிவாசன்
ஜன.8 முதல் சென்னை புத்தகக் காட்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 3 ஆயிரம் அரங்குகளுடன் சென்னை புத்தகக்காட்சியை ஜன.8-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
இதுதொடர்பாக தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் தலைவர் ஆர்.எஸ்.சண்முகம், பொருளாளர் ஏஆர். வெங்கடாச்சலம், துணைத் தலைவர் நக்கீரன் கோபால் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் சென்னை புத்தகக்காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2026-ம் ஆண்டுக்கான 49-வது சென்னை புத்தகக்காட்சி வரும் ஜன.8-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை 14 நாட்களுக்கு நடைபெற உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் புத்தகக்காட்சியை தொடங்கி வைக்கிறார். இந்த முறை சென்னை புத்தகக்காட்சிக்கு இலவச அனுமதிக்கான நடவடிக்கையை கொண்டுவர முயற்சித்து வருகிறோம்.
இந்த புத்தகக் காட்சியில் தமிழக அரசின் பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள், உலக தமிழாராய்ச்சி நிறுவனம், மத்திய அரசின் சாகித்ய அகாடமி, நேஷனல் புக் டிரஸ்ட், பப்ளிகேஷன் டிவிஷன், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம், தொல்லியல் துறை போன்றவற்றுடன் உலகளவில் புகழ்பெற்ற பதிப்பகங்களான பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா, பிரிட்டிஷ் கவுன்சில், ஹார்பெர்காலின்ஸ் பப்ளிஷர்ஸ் இந்தியா, சைமன் மற்றும் ஷுஸ்டர் இந்தியா ஆகிய நிறுவனங்களும் பங்கேற்கின்றன.
இதற்காக மொத்தம் 3,000 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் பதிப்பகங்களுக்காக தனி அரங்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. தினம்தோறும் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர்.
கலைஞர் பொற்கிழி விருது: இது தவிர ஒவ்வொரு நாள் மாலையும் சிந்தனை அரங்கில் தமிழகத்தின் தலை சிறந்த அறிஞர்கள், எழுத்தாளர்களின் உரைகளும் நடைபெறும். கடந்த ஆண்டைவிட இந்த முறை இரண்டு மடங்கு விற்பனையை அதிகரிக்கவும், வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் திட்டமிட்டுள்ளோம். அதன்படி ஏறத்தாழ 25 லட்சம் வாடிக்கையாளர்களை ஈர்க்க இலக்கு நிர்ணயித்திருக்கிறோம்.
தொடக்க நாள் விழாவில் கவிஞர் சுகு மாறன், சிறுகதை எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, நாவல் எழுத்தாளர் இரா. முருகன், பேராசிரியர் பாரதி புத்திரன், கருணா பிரசாத் மற்றும் மொழி பெயர்ப்பாளர் வ.கீதா ஆகியோருக்கு கலைஞர் பொற்கிழி விருது முதல்வரால் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
