

சென்னை ஐ.சி.எஃப் ஆலையில் தயாரிக்கப்பட்ட 2-வது ஏசி மின்சார ரயில் தற்போது அண்ணனூர் ரயில்வே யார்டில் நிறுத்தி, பலவித சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறது. இந்த ரயில் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை: சென்னையில் 2-வது ஏசி மின்சார ரயில் சேவையை விரைவில் தொடங்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்த ரயிலை சென்ட்ரல் - அரக்கோணம் மார்க்கத்தில் இயக்குவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படுகிறது.
சென்னை ஐ.சி.எப். ஆலையில், தயாரிக்கப்பட்ட 12 பெட்டிகள் கொண்ட முதல் ‘ஏசி’ மின்சார ரயில் கடந்த ஆண்டு ஏப்.19-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த ரயில் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கத்தில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இதற்கிடையில், சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், கடற்கரை - செங்கல்பட்டு ஆகிய இரு மார்க்கங்களில் `பீக் ஹவர்சில்' கூடுதல் ஏசி மின்சார ரயில்கள் இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த கோரிக்கையின் பேரில், கூடுதல் மின்சார ரயில் இயக்க ரயில்வே வாரியத்துக்கு தெற்கு ரயில்வே பரிந்துரை செய்திருந்தது. ரயில்வே வாரியமும் தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்துக்கு ஏசி மின்சார ரயில் தயாரித்து வழங்க, ஐ.சி.எஃப்-இடம் கேட்டிருந்தது.
இதற்கிடையில், சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், கடற்கரை - செங்கல்பட்டு ஆகிய இரு மார்க்கங்களில் `பீக் ஹவர்சில்' கூடுதல் ஏசி மின்சார ரயில்கள் இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த கோரிக்கையின் பேரில், கூடுதல் மின்சார ரயில் இயக்க ரயில்வே வாரியத்துக்கு தெற்கு ரயில்வே பரிந்துரை செய்திருந்தது. ரயில்வே வாரியமும் தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்துக்கு ஏசி மின்சார ரயில் தயாரித்து வழங்க, ஐ.சி.எஃப்-இடம் கேட்டிருந்தது.
இதையடுத்து, 2-வது ஏசி மின்சார ரயில் தயாரிப்பு பணி சென்னை ஐ.சி.எஃப் ஆலையில் கடந்த ஆண்டு தொடங்கி, நடைபெற்று வந்தது. இப்பணி இரண்டு மாதம் முன்பு நிறைவடைந்தது.
இதையடுத்து, இந்த ஏசி மின்சார ரயிலை தெற்கு ரயில்வேயின் சென்னை ரயில்வே கோட்டத்துக்கு ஒரு மாதத்துக்கு முன்பு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த ரயில், தற்போது அண்ணனூர் ரயில்வே யார்டில் நிறுத்தி, பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறது. இந்த ரயில் சென்ட்ரல் - அரக்கோணம் மார்க்கத்தில் இயக்கியும் சோதிக்கப்படுகிறது.
இது குறித்து, சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது: சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் மார்க்கத்தில் தினசரி சுமார் 200-க்கும் மேற்பட்ட மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் தினசரி சுமார் 4 லட்சம் பேர் பயணிக்கின்றனர்.
தினசரி காலை, மாலையில் `பீக் ஹவர்சில்' மின்சார ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. கூடுதல் மின்சார ரயில்கள் மற்றும் ஏசி மின்சார ரயில் இயக்கவும் பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக, இந்த மார்க்கத்தில் ஏசி மின்சார ரயில் இயக்குவது தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது. இதுபோல, செங்கல்பட்டு - கடற்கரை தடத்திலும் மேலும் ஒரு ஏசி மின்சார ரயில் இயக்கவும் பரிந்துரை உள்ளது.
எனவே, எந்த மார்க்கத்தில் இயக்குவது என்பது குறித்து முடிவு செய்து, ஏசி மின்சார ரயில் சேவையை விரைவில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. 12 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் அமர்ந்தபடி 1,116 பேரும், நின்று கொண்டு 3,798 பேரும் என மொத்தம் 4,914 பேர் பயணிக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.