

சென்னை: ஒளி பிரதிபலிப்பு பட்டை பொருத்தும் நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டு, இணையதளம் மூலம் சரிபார்க்கும் நடைமுறை திரும்பப்பெறப்படுவதாக போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ளார்.
லாரிகள், பேருந்துகள் மற்றும் வணிக போக்குவரத்து வாகனங்களின் இரவு நேரப் பாதுகாப்புக்காக மோட்டார் வாகன சட்டப்படி, முன்பக்கம் வெள்ளை, பின்பக்கம் சிவப்பு, பக்கவாட்டுகளில் மஞ்சள் நிறப் பட்டைகள் ஒட்டப்பட வேண்டும்.
இந்த ஒளி பிரதிபலிப்பு பட்டை ஒட்டுவதற்கு தகுதிபெற்ற நிறுவனங்களை போக்குவரத்து துறை தேர்ந்தெடுக்கும், அவர்கள் பட்டையை ஒட்டுவார்கள்.
மேலும் அவர்களுக்கு வாகனங்களில் பிரதிபலிப்பு பட்டை ஒட்டப்பட்டிருக்கும் புகைப்படத்தை, இதற்கான போக்குவரத்து துறையின் இணைதள பக்கத்தில் பதிவேற்றம் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டிருக்கும்.
அதன்படி, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அந்த இணையதளத்தில் ஆய்வு செய்து ஒளி பிரதிபலிப்பு பட்டை பொருத்தம் சான்றிதழ் வழங்குவார்கள். ஆனால், இந்த நடைமுறையில் சில குறிப்பிட்ட நிறுவனங்களில் மட்டுமே பிரதிபலிப்பு பட்டை ஒட்ட வேண்டும் என வாகன உரிமையாளர்கள் கட்டாயப்படுத்தப்படுவதாக ஒரு சில மாநிலங்களில் புகார்கள் எழுந்ததாக மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனால், ஏஐஎஸ் 090 ஒப்புதல் பெற்ற பிரதிபலிப்பு பட்டைகள் கொண்ட எந்த நிறுவனத்திலும் பட்டைகளை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. இதனிடையே இணையதளம் மூலம் பிரதிபலிப்பு பட்டை சரிபார்க்க வேண்டும் என்ற நடைமுறை திரும்பப் பெறப்பட்டுள்ளதாக போக்குரத்து ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன் தெரிவித்துள்ளார்.
அதன்படி வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் இணையதளம் வாயிலாக ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மேலும், வாகனத்தை ஒவ்வொரு முறையும் தகுதி சான்றிதழ் பெறுவதற்காக கொண்டு செல்லும்போது புதிதாக பிரதிபலிப்பு பட்டை பொருத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தத் தேவையில்லை.
ஏற்கெனவே வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள பட்டை நல்ல நிலையில் இருந்தால் அதையே தொடர்ந்து பயன்படுத்தலாம். சேதமடைந்த, உரிந்த அல்லது ஒளிரும் தன்மையை இழந்த பகுதிகளை மட்டும் மாற்றினால் போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.