கோப்புப் படம்
சென்னை: தமிழகத்தில் நாளை முதல் செப்.12-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தெற்கு தெலங்கானா முதல் மன்னார் வளைகுடா வரை ராயலசீமா மற்றும் தமிழக பகுதிகள் வழியாக சுமார் 0.9 கிமீ உயரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக நாளை (செப்.7) முதல் 9-ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், இதர தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
10-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
11, 12 தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
உள் தமிழகத்தில் நாளை முதல் 10-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக மதுரை மேலூரில் 12 செமீ, தானியமங்கலத்தில் 9 செமீ, விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் 8 செமீ, அரியலூரில் 7 செமீ, மதுரை மேட்டுப்பட்டி, விமான நிலையம், புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல், தஞ்சாவூர் மாவட்டம் மஞ்சளாறு விமானநிலையம் ஆகிய இடங்களில் தலா 6 செமீ மழை பதிவாகியுள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.