தமிழகத்தில் மார்ச் 21 வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் மார்ச் 21 வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் மார்ச் 21-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. வடக்கு இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலிருந்து குமரிக்கடல் பகுதிகள் வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக நாளை (மார்ச் 16) நீலகிரி மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழையும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். 17-ம் தேதி தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் உள் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

18-ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், 19-ம் தேதி ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 20, 21 தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி ஃபாரன்ஹீட், குறைந்தபட்ச வெப்பநிலை 77 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும்.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் பெருஞ்சாணி அணை, புத்தன் அணை, பேச்சிப்பாறை, திருநெல்வேலி மாவட்டம் ஊத்தில் தலா 2 செமீ, நாலுமுக்கு மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் சிற்றாறில் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மார்ச் 21 வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
காவல் அதிகாரிகளே குற்றமிழைத்தால் பெண்கள் பாதுகாப்பு எப்படி சாத்தியமாகும்? - தினகரன் கேள்வி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in