

சென்னை: தமிழகத்தில் நாளை (மே 24) கோவை, சேலம், வேலூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சுமார் 3.1 கிமீ முதல் 5.8 கிமீ உயரம் வரை ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளையும் (மே 24), நாளை மறுதினமும் ஒருசில இடங்களிலும், 26 முதல் 29-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் நாளையும், நாளை மறுதினமும் நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.
26-ம் தேதி கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் நாளை முதல் 27-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட குறைவாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 86 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும்.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு, ஊத்து, திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் தலா 4 செமீ, திருநெல்வேலி மாவட்டம் காக்காச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் விருகாவூர், திருப்பத்தூரில் தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.