கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு ஏன் நிராகரித்தது? - 5 காரணங்களுடன் அமைச்சர் பதில்

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை நிராகரித்ததற்கான 5 காரணங்களை மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சென்னையைத் தொடர்ந்து, கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டது. இதற்காக மதுரையில் ரூ.11,360 கோடி,கோவையில் ரூ.10,740 கோடியில் விரிவான திட்ட அறிக்கை மத்திய அரசிடம் வழங்கப்பட்டது.

இந்த திட்ட அறிக்கையை மத்திய அரசு கடந்த மாதம் திருப்பி அனுப்பியது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், இரு நகரங்களுக்கான மெட்ரோ ரயில் சேவைக்கான விரிவான திட்ட அறிக்கைகளை மீண்டும் பரிசீலனை செய்யக் கோரி, பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக நிராகரித்ததா அல்லது மறுத்ததா என மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் கனிமொழி என்விஎன். சோமு, நேற்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரத் துறை இணை அமைச்சர் டோகன் சாஹு பதில் அளித்துபேசியதாவது: கோவை, மதுரை மெட்ரோ திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கை மற்றும் விரிவான இயக்கத் திட்டம் ஆகியவற்றை தமிழக அரசு சமர்ப்பித்தது. இந்த திட்டங்கள் பரிசீலிக்கப்பட்டு, சில காரணங்களுக்காக, தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

கோவையை பொருத்தவரை, குறைந்த சராசரி பயண தூரங்கள் மற்றும் சாலைகளில் தற்போது உள்ள சராசரி வேகங்கள் காரணமாக, மெட்ரோ அமைப்பை பயன்படுத்துவதில் கணக்கில் கொள்ள முடியாத (மிகக் குறைந்த) நேர சேமிப்பே இருக்கும். எனவே, மெட்ரோவுக்கு மக்கள் மாறுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. மேலும், மாநகராட்சி பகுதியுடன், உள்ளூர் திட்டமிடல் பகுதியின் மக்கள் தொகையும் மெட்ரோ அமைப்பின் சேவையைப் பெறும் என்று எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், மாநகராட்சி பகுதியைவிட 5 மடங்கு பெரிதாக உள்ள உள்ளூர் திட்டமிடல் பகுதியில் வசிப்பவர்கள் மெட்ரோவை பயன்படுத்துவது கடினம்.

முன்மொழியப்பட்ட 34 கி.மீ நீள வழித்தடத்துக்கான தினசரி எதிர்பார்க்கப்படும் பயணிகளின் எண்ணிக்கை 5.90 லட்சம் பேர். இது, பெரிய மக்கள் தொகை கொண்ட சென்னை மெட்ரோவின் 55 கி.மீ தொலைவுக்கு தினசரி பயணிகள் எண்ணிக்கையான 4 லட்சத்தைவிட அதிகம்.

போதுமான வழி உரிமை இல்லாததால், பல இடங்களில் நிலையத்தை நிர்மாணிப்பது சாத்தியமில்லை.

மதுரைக்கு சேவை வழங்குவதற்கு, செலவு குறைந்த சிறந்த அமைப்பான தற்போதைய பேருந்து விரைவுப் போக்குவரத்து அமைப்பே போதுமானது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
‘வந்தே மாதரம்’ பாடலின் 150-வது ஆண்டு விழாவையொட்டி சிறப்பு விவாதம்: பாரதியாருக்கு பிரதமர் மோடி புகழாரம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in