

சென்னை: “தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை தனியார்மயமாக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது” என்று தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுத்துறை வங்கிகளில் அரசின் பங்குகளை 75 சதவீதமாகக் குறைக்க மத்திய பாஜக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நிதி ஆயோக் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் இத்தொடர் நடவடிக்கைகளால், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கை 27-ல் இருந்து 12 ஆக குறைக்கப்பட்டு வருகிறது.
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவையும் இந்த நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் அரசின் பங்குகளை 51 சதவீதத்திற்குக் கீழே கொண்டு வர முயற்சிகள் நடைபெறுகின்றன. கடந்த 2021-22-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தது தற்போது நடைமுறைக்கு வரவுள்ளது.
இந்திய தொழில் வளர்ச்சி வங்கியின் 60.72 சதவீத பங்குகளைக் கனடா நாட்டைச் சேர்ந்த அந்நிய நிறுவனத்துக்கு தாரைவார்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் இந்திய அரசின் பங்கு 81.19 சதவீதமாகவும், யுனைடெட் கமர்ஷியல் வங்கியில் 90.95 சதவீதமாகவும், பஞ்சாப் & சிந்து வங்கியில் 93.85 சதவீதமாகவும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 92.44 சதவீதமாகவும் உள்ளது.
இதை 75 சதவீதமாகக் குறைத்து, காலப்போக்கில் 51 சதவீதத்திற்கு விற்பனை செய்து, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் கதவுகளை தனியாருக்குத் திறந்துவிட மத்திய மோடி அரசு தீவிரமாகச் செயல்படுகிறது. இது அப்பட்டமான கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கை ஆகும்.
கடந்த 1969-ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, ரூ.50 கோடிக்கும் அதிகமான வைப்புத்தொகை கொண்டிருந்த 14 வங்கிகளை தேசியமயமாக்கினார். அதனால் ஏழை, எளிய மக்கள் பெற்ற பயன்களைப் பறிக்கும் வகையில் மக்கள் விரோத நடவடிக்கைகளை நிதி ஆயோக் எடுத்து வருகிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.