தமிழக மீனவர்கள் பிரச்சினையில் நடவடிக்கைகள் என்னென்ன? - மத்திய அரசு விவரிப்பு

உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்
தமிழக மீனவர்கள் பிரச்சினையில் நடவடிக்கைகள் என்னென்ன? - மத்திய அரசு விவரிப்பு
Updated on: 
2 min read

மதுரை: இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் மற்றும் மீன்பிடிப் படகுகளை விரைவாக விடுவித்து தாயகம் திரும்பச் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை தூதரக ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதேவேளையில், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டாமல் கவனமாக இருக்க வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த‌ நாம் தமிழர் கட்சியின் மீனவர் பாசறை நிர்வாகி தீரன் திருமுருகன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: ‘இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுகின்றனர்.

இவர்கள் இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட போதிலும், தொடர்ந்து இலங்கை சிறையில் இருக்க நேரிடுகிறது. இவ்வாறு இலங்கை சிறையில் 24 தமிழக மீனவர்கள் இருப்பதாக தெரிகிறது. இதில் 5 பேரின் விவரங்கள் மட்டுமே தெரியவந்துள்ளது.

எனவே, சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டும் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படாததால் இலங்கையில் தொடர்ந்து காவலில் இருக்கும் தமிழக மீனவர்கள் தொடர்பான விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும், மீள்குடியேற்றத்துக்கு 7 நாட்களுக்குள்ளாக உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் செயல்முறை திட்டங்களை வகுக்கவும் உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘இந்திய மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பது, இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிப்பது உள்ளிட்ட காரணங்களுக்காக கைது செய்யப்படுகின்றனர்.

இந்தக் குற்றச்சாட்டுகள் அடிப்படையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் உட்பட 39 இந்திய இலங்கை சிறைகளில்உள்ளனர். இவர்களில் 12 பேர் யாழ் சிறையிலும், 18 பேர் வவுனியா சிறையிலும், 9 பேர் வெளிக்கடா சிறையில் உள்ளனர்.

இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும்போது இரு தரப்பு நட்புறவு மற்றும் சிறப்பு நடவடிக்கையால் தண்டனை இடை நிறுத்தம் செய்யப்பட்டு மீனவர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர்.

இந்திய மீனவர்களுக்கு கொழும்பில் உள்ள இந்திய தூதரகம், யாழ்ப்பாணத்தில் உள்ள துணை தூதரகமும் தேவையான சட்ட உதவிகள், உணவு மற்றும் மருத்துவம், அபராதத் தொகை செலுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றன. இந்திய தூதரக அதிகாரிகள் தொடர்ந்து இலங்கை சிறைச்சாலைகளுக்கு நேரில் சென்று மீனவர்களின் நலம் மற்றும் சட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர்.

நெகம்பு சிறையில் ஜூலையில் நடந்த கலவரத்தில் 30 இலங்கை சிறை அதிகாரிகள் மற்றும் கைதிகள் உயிரிழந்தனர். இதில் இந்தியாவை சேர்ந்த சரத்சந்திரன் என்பவரும் ஒருவர். இவர் போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டவர். கொழும்பு, ரத்னபுரா, நெகம்பு சிறைகளில் ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கலவரத்தில் இந்திய மீனவர்கள், இந்தியர்கள் யாரும் காயமடையவில்லை.

இந்தச் சம்பவங்களையடுத்து இலங்கை சிறைகளில் உள்ள இந்திய மீனவர்கள் மற்றும் இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்திய மீனவர்கள் மற்றும் மீன்பிடிப் படகுகளை விரைவாக விடுவித்து தாயகம் திரும்பச் செய்வது உள்ளிட்ட விவகாரங்களை இருதரப்பு வழிமுறைகள், தூதரக ரீதியான தொடர்புகள் மற்றும் பல்வேறு அதிகாரப்பூர்வ மற்றும் உயர்மட்டக் கலந்துரையாடல்கள் மூலம் இலங்கை அரசிடம் இந்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்த விவகாரத்தை மனிதாபிமானம் மற்றும் வாழ்வாதார அடிப்படையில் மட்டுமே பரிசீலிக்க வேண்டும்’ மத்திய அரசின் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், “12 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அடுத்தக்கட்டமாக 16 மீனவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவர். 11 மீனவர்கள் மூன்று மாதம் முதல் ஆறு மாதம் வரை சிறை தண்டனை பெற்றுள்ளனர்.

இந்தியா - இலங்கை ஒப்பந்தப்படி தூதரக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, மீனவர்களின் தண்டனை குறைக்கப்பட்டு அவர்கள் விரைவில் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி செல்லக் கூடாது. கவனமாக இருக்க வேண்டும்” என்று கூறி மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

தமிழக மீனவர்கள் பிரச்சினையில் நடவடிக்கைகள் என்னென்ன? - மத்திய அரசு விவரிப்பு
டாஸ்மாக் கடையை மாற்றாவிட்டால் செங்கல்பட்டு ஆட்சியர் ஆஜராக உத்தரவிட நேரிடும்: ஐகோர்ட்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in