

சென்னை: “தமிழகத்தின் நிதிநிலையில் செயற்கையான நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது” என்று பட்டியலிட்டு குற்றம்சாட்டினார், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு.
தமிழக சட்டப்பேரவையில் 2026-27-க்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசும்போது, “தமிழகத்தின் நிதிநிலையில் செயற்கையான நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான, அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. பல மாநிலங்களின் ஆட்சேபங்கள் மற்றும் எதிர்ப்புகளுக்கு கருத்தில் கொள்ளாமல், சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விகிதங்களை சீரமைக்க, சரக்குகள் மற்றும் சேவைகள் வரி அமைப்பு ஒப்புதல் அளித்தது.
ஏற்கெனவே ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கிடையில், இந்த வரி விகித மாற்றங்கள் மாநிலங்களின் நிதி நிலையில் மேலும் குறிப்பிடத்தக்க அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும். நடப்பு ஆண்டில் மட்டும் ரூ.9,600 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவைகள் வரி வருவாயிலிருந்து முன்னறிவிப்போ அல்லது மாநில அரசுடன் கலந்தாலோசனை இன்றி, பெரும் தொகையான ரூ.1,709 கோடியை இந்திய ரிசர்வ் வங்கியில் உள்ள மாநில அரசின் கணக்கில் இருந்து மத்திய அரசு 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பிடித்தம் செய்தது. இதனால், சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விதிப்பின் கீழ் வருவாய் குறைவு ஏற்பட்டுள்ளதால், நடப்பு நிதியாண்டில் மாநிலத்தின் நிதி நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
2025-26-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் வரவு-செலவு திட்டத்தில், தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மத்திய வரிகளில் பங்கு, திருத்த மதிப்பீடுகளில் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், நடப்பு ஆண்டில் தமிழக அரசுக்கு எதிர்பாராத வகையில் ரூ.1,202 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசு, நிலுவையிலுள்ள உத்திரவாதங்களில் 5 சதவீதத்தை உத்திரவாத மீட்பு நிதியத்துக்கு மாற்றவேண்டும் என முன்னறிவிப்பின்றி விதித்துள்ள நிபந்தனையால், அரசுக்கு ரூ.3,087 கோடி எதிர்பாராத மற்றும் கூடுதல் செலவினம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகத்துக்கு ரூ.413 கோடி மட்டுமே உள்ளபடியான இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மத்திய அரசின் நிபந்தனை, நடப்பு ஆண்டில் மாநில அரசுக்கு ரூ.15,877 கோடி கூடுதல் செலவை ஏற்படுத்தியுள்ளது. ஒருங்கிணைந்த கல்வி இயக்கத்துக்கான மானியங்கள் ரூ.3,548 கோடி, ஜல் ஜீவன் இயக்கத்துக்கு ரூ.3,112 கோடி மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய நிதிக்குழு பரிந்துரைப்படி விடுவிக்கப்பட வேண்டிய மானியங்கள் ரூ.2,246 கோடியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்டப் பணிகளுக்கு மாநில அரசின் சொந்த நிதியிலிருந்து விடுவிக்கப்பட்ட மத்திய அரசின் பங்கான சுமார் ரூ.9,500 கோடி, மாநில அரசின் மொத்த நிலுவைக் கடன்களின் ஒரு பகுதியாகவே தொடர்ந்து வருகிறது. இதனால், மாநிலத்தின் கடன் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் உயர்ந்து காணப்படுவதோடு மட்டுமல்லாமல், மாநிலத்துக்கு உரிய கடன் திரட்டும் திறனையும் பாதித்துள்ளது. இதனால், மாநில அரசின் பணப்புழக்கமும் பாதிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில் மாநில அரசு எதிர்கொண்டு வரும் இத்தகைய சவால்களால், மத்திய அரசு மாநில அரசின் நிதிநிலையில் ஏற்படுத்தியுள்ள அழுத்தமானது, மாநிலத்தின் நிதிநிலையில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சவால்களுக்கு இடையில் தமிழக முதல்வர், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேறுவதை உறுதி செய்துள்ளார்.”
நிலுவைக் கடன் ரூ.10.62 லட்சம் கோடி:
‘தமிழக அரசின் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் மதிப்பீடுகளில் ரூ.2 லட்சத்து 20,895 கோடியாக மதிப்பிடப்பட்ட மாநில சொந்த வரி வருவாய், திருத்த மதிப்பீடுகளில் ரூ. 2 லட்சத்து 6,540 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வருவாய் குறைந்துள்ளதே இதற்கு காரணமாகும்.
2026-27-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் மதிப்பீடுகளில் சொந்த வரிவருவாய் ரூ.2 லட்சத்து 29,579 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது, வணிகவரிகளின்கீழ் ரூ.1 லட்சத்து 62,417 கோடி, முத்திரைத்தாள் மற்றும் பத்திரப்பதிவுக் கட்டணங்களின்கீழ் ரூ.31,881 கோடி, வாகனங்கள் மீதான வரிகளின்கீழ் ரூ.14,928 கோடி மற்றும் மாநில ஆயத்தீர்மையின்கீழ் ரூ.13,668 கோடி வருவாயை உள்ளடக்கியதாகும்.
இந்த 2025-26-ம் ஆண்டு பட்ஜெட் மதிப்பீடுகளில் வரியல்லா வருவாய் ரூ.28,819 கோடி என்றிருந்த நிலையில், திருத்த மதிப்பீடுகளில் ரூ.26,265 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது, 2026-27 ம் ஆண்டின் இடைக்கால பட்ஜெட் மதிப்பீடுகளில் ரூ.27,704 கோடியாக இருக்கும். இந்த இடைக்கால பட்ஜெட் மதிப்பீடுகளில் சொந்த வருவாய் ரூ.2 லட்சத்து 57,283 கோடியாக மொத்த வருவாய் வரவுகளில் 74.67 சதவீதத்தைக் கொண்டிருக்கும்.
இந்த 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் மதிப்பீடுகளில் ரூ.23,834 கோடியாக மதிப்பிடப்பட்ட மத்திய உதவி மானியங்கள், திருத்த மதிப்பீடுகளில் ரூ.20,073 கோடியாக குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த கல்வித்திட்ட முழு பங்குத்தொகையை மத்திய அரசு விடுவிக்கும் என எதிர்பார்த்து, மத்திய உதவி மானியங்கள் 2026-27-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில் ரூ.24,762 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய வரிகளின் பங்கு 2025-26- பட்ஜெட் மதிப்பீடுகளில் ரூ.58,022 என மதிப்பிடப்பட்ட நிலையில், திருத்த மதிப்பீடுகளில் ரூ.56,819 கோடியாக கணிக்கப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட் அடிப்படையில், இடைக்கால பட்ஜெட்டில் மத்திய வரிகளின் பங்கு ரூ.62,531 கோடியாக இருக்கும். மொத்தமாக, இந்த 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் மதி்ப்பீடுகளில் ரூ.3 லட்சத்து 31,569 கோடியாக மதிப்பிடப்பட்ட மொத்த வருவாய், திருத்த மதிப்பீடுகளில் ரூ.3 லட்சத்து 9,698 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.
வரும் 2026-27-ம் ஆண்டில் மொத்த வருவாய் வரவுகள் ரூ. 3 லட்சத்து 44,575 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது, திருத்த மதிப்பீடுகளைவிட 11.26 சதவீதம் அதிகமாகும்.
செலவைப் பொறுத்தவரை, 2025-26-ம் ஆண்டு பட்ஜெட் மதிப்பீடுகளில் ரூ.3 லட்சத்து 73,204 கோடியாக மதிப்பிடப்பட்ட மொத்த வருவாய் செலவினங்கள், திருத்த மதிப்பீடுகளில் ரூ.3 லட்சத்து 78,917 கோடியாக உயர்ந்துள்ளது. மத்திய அரசு நிபந்தனையின்படி, மின்பகிர்மான கழகத்துக்கு ரூ.15,877 கோடி, உத்தரவாத மீட்பு நிதியத்துக்கு தொகை மாற்றம் செய்ய ரூ.3,087 கோடி உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.
குடும்பத்துக்கு ரூ.3 ஆயிரம் பொங்கல் பரிசு, மகளிர் உரிமைத்திட்ட பயனாளிகளுக்கு சிறப்பு நிதியுதவியாக ரூ.5 ஆயிரம் என இந்த அரசு ரூ.10,849 கோடி கூடுதலாக செலவிட்டுள்ளது. கூடுதல் செலவு ஏற்பட்டபோதும், வளர்ச்சி சாரா செலவினங்களில் ஏற்படக்கூடிய சேமிப்பின் காரணமாக, ஒட்டுமொத்த செலவினங்களின் உயர்வு ரூ. 5,713 கோடியாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வரும் 2026-27-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில், மொத்த வருவாய் செலவினங்கள் ரூ.3 லட்சத்து 93,272 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது, 2025-26-ம் ஆண்டு திருத்த மதிப்பீடுகளைவிட 3.79 சதவீதம் அதிகமாகும்.
இந்த 2025-26-ம் ஆண்டு பட்ஜெட் மதிப்பீடுகளில் ரூ.57,231 கோடியாக மதிப்பிடப்பட்ட மூலதனப் பணிகளுக்கான செலவுகள், திருத்த மதிப்பீடுகளில் ரூ.51,443 கோடியாக கணிக்கப்பட்டுள்ளது. மூலதன செலவு குறைந்தாலும், கடந்தாண்டைவிட அதிகரித்துள்ளது. 2026-27 இடைக்கால பட்ஜெட் மதிப்பீடுகளில் மூலதன பணிகளுக்கான செலவு ரூ.59,562 கோடியாக இருக்கும். மேலும், இடைக்கால பட்ஜெட்டில் நிகரக் கடன் உட்பட மூலதனச் செலவினங்கள் ரூ.73,270 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி சீரமைப்பு, மத்திய நிதி நிறுத்தம், மின்பகிர்மானக் கழகத்துக்கான நிதி, உத்தரவாத மீட்பு நிதியத்துக்கு தொகை மாற்றம் செய்தது போன்ற காரணங்களால், 2025-26-ம் ஆண்டு பட்ஜெட்டில், ரூ.41,635 கோடியாக மதிப்பிடப்பட்ட வருவாய்ப் பற்றாக்குறை, திருத்த மதிப்பீடுகளில் ரூ.69,219 கோடியாக உயர்ந்துள்ளது. மத்திய அரசின் நெருக்கடி இல்லாவிட்டால் வருவாய்ப் பற்றாக்குறை கட்டுப்படுத்தப்பட்டிருக்கும். மேலும், இடைக்கால பட்ஜெட் மதிப்பீடுகளில் வருவாய்ப் பற்றாக்குறை ரூ.48,696 கோடியாக குறையும்.
அதேபோல் 2025-26-ம் ஆண்டு பட்ஜெட் மதிப்பீடுகளில் ரூ.1 லட்சத்து 6,963 கோடியாக உள்ள நிதி பற்றாக்குறை, திருத்த மதிப்பீடுகளில் ரூ.1 லட்சத்து 24,007 கோடியாக கணிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்கியிருந்தல் நடப்பு நிதியாண்டின் அளவும் மேம்பட்டுக் காணப்பட்டிருக்கும். 2026-27 இடைக்கால பட்ஜெட்டில் நிதிப்பற்றாக்குறை ரூ.1 லட்சத்து 21,949 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த 2025-26-ம் ஆண்டு பட்ஜெட் மதிப்பீடுகளில் ரூ.9 லட்சத்து 29,959 கோடியாக மதிப்பிடப்பட்ட ஒட்டுமொத்த நிலுவைக் கடன், 2025-26-ம் ஆண்டுக்கான திருத்த மதிப்பீடுகளில் ரூ.9 லட்சத்து 52,374 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. எனினும், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் மத்திய அரசின் கணக்குகளில் இடம்பெற வேண்டிய ரூ.9,522.65 கோடியும் இதில் அடங்கும்.
இது நீங்கலாக திருத்த மதிப்பீடுகளில் நிலுவைக் கடன் ரூ.9 லட்சத்து 42,851 கோடியாகவும், இடைக்கால பட்ஜெட்டில் ரூ.10 லட்சத்து 62,248 கோடியாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இடைக்கால பட்ஜெட் மதிப்பில் கடன் 26.12 சதவீதமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது’ என்று இடைக்கால பட்ஜெட்டில் திருத்த மதிப்பீடுகள் குறித்து தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
தமிழக இடைக்கால பட்ஜெட் - முக்கிய ஒதுக்கீடுகள்:
> முதியோர் ஓய்வூதியம் உட்பட அனைத்து சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கும் வருவாய்த் துறையின் கீழ் ரூ.5,463 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறைகளுக்கு ரூ.56,914 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
> பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.48,534 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
> சிறப்புத் திட்ட செயலாக்கத் துறைக்கு ரூ.17,088 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
> போக்குவரத்து துறைக்கு ரூ.13,062 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
> நெடுஞ்சாலை துறைக்கு ரூ.21,132 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
> பொதுப்பணித் துறைக்கு ரூ.1,694 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
> சுகாதாரத் துறைக்கு ரூ.22,090 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
> வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சிக்கு ரூ.7,547 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
> கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறைக்கு ரூ. 4,435 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
> சுற்றுலா துறைக்கு ரூ.1,394 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.