

போக்சோ வழக்கில் கைதான கிரானைட் தொழிலதிபர் வீரமணி
சென்னை: போக்சோ வழக்கில் கைதான ‘ஜெம்’ கிரானைட்ஸ் தொழிலதிபர் வீரமணி தொடர்புடைய இடங்களில் மத்திய குற்றப் பிரிவு போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஜெம் கிரானைட்ஸ் அலுவலகத்திலும், ஆர்.கே.சாலையில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
முன்னதாக, இந்த வழக்கில் ரயில்வே தொழிற்சங்கமான எஸ்ஆர்எம்யூ-வின் பொதுச் செயலாளர் கண்ணையாவின் மகன் பிரகாஷுக்கு போலீஸார் சம்மன் அனுப்பினர். ஆனால், அவர் வெளிநாட்டில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, அவருக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, “தவெக ஆட்சியில் பாலியல் வழக்குகளில் குற்றஞ்சாட்டப்படும் நபர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது. ஜெம் கிரானைட் வீரமணி மீதான போக்சோ வழக்கு முதல்வரின் நேரடிக் கண்காணிப்பில் விசாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆட்சியில் இந்த வழக்கை கைவிட பல கோடி ரூபாய் கைமாறி இருக்கிறது” என்று அமைச்சர் ராஜ்மோகன் கூறியிருப்பதும் கவனிக்கத்தக்கது.
தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள ‘ஜெம்’ கிரானைட்ஸ் நிறுவனர் ஆர். வீரமணி (84) மீதான போக்சோ வழக்கு விவகாரத்தில், திடுக்கிடும் பின்னணி தகவல்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டு இருக்கின்றன.
குழந்தை உரிமை ஆர்வலர் ஒருவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தின் கீழ் உள்ள பாலியல் தடுப்புப் பிரிவில் கடந்தாண்டு கொடுத்த புகார் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டிருந்த பென்-டிரைவ் மூலம் ‘ஜெம் கிரானைட்ஸ்’ நிறுவனர் வீரமணி சிக்கினார். அதன் பின்னர் அவரது லீலைகள் ஒவ்வொன்றாக வெளிவர ஆரம்பித்தன.
தேனாம்பேட்டையில் உள்ள வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து அந்த வீட்டில் சிறுமிகள் மற்றும் பெண்களை வரவழைத்து அவர்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக ஏழ்மை நிலையில் உள்ள சிறுமிகளுக்கு பணம், செல்போன் மற்றும் ஆடம்பரப் பரிசு பொருட்களை கொடுத்து வீரமணி, தனது பாலியல் இச்சைகளை தீர்த்துள்ளார். இவரால் 100-க்கும் மேற்பட்ட சிறுமிகள் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் வீரமணியின் தேனாம்பேட்டை வீட்டை கவனித்து வந்த அவரது உதவியாளர்கள் சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்கன் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக வீரமணி, சிறுமிகளுடன் இருந்த ரகசிய வீடியோக்களை வைத்திருந்தவரும், 23 ஆண்டுகள் ஜெம் கிரானைட்ஸில் பணிபுரிந்தவரும், தற்போது பாலாஜி குளோபல் எண்டர் பிரைசஸில் பணிபுரியும் கணேசன் என்பவரை போலீஸார் நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் மேலும் சிலருக்கு போலீஸார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
வீரமணியின் பாலியல் குற்றங்கள் தொடர்பாக 06.10.2025 அன்று புகார் அளிக்கப்பட்டது. மறுநாள் போலீஸார் வழக்குப் பதிந்தனர். அதன் பின்னர் வீடியோவில் பதிவாகி இருந்த விவரம் குறித்து வீரமணியிடம் போலீஸார் விசாரித்துள்ளனர். ஆனால், சிறுமிகளுடன் உள்ள நபர் நான் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, தேனாம்பேட்டை வீட்டில் இருந்த சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்கனிடம் விசாரிக்கப்பட்டது. ஆனால், அவர்கள் அதுபோன்ற குற்றச் செயல்கள் எதுவும் நடைபெறவில்லை என தெரிவித்துள்ளனர்.
அதே பகுதியில் உள்ள கண் மருத்துவமனை பணியாளர், பஞ்சர் கடைக்காரரிடமும் போலீஸார் விசாரித்துள்ளனர். அவர்கள் சம்பந்தப்பட்ட வீட்டுக்கு வெளியாட்கள் யாரும் வருவதில்லை என தெரிவித்துள்ளனர். இவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்த போலீஸார், ஆழமாக விசாரிக்காமல் வழக்கை ரத்து செய்யும்படி நீதிமன்றத்தை நாடினர்.
அப்போது, அவர்கள் நீதிமன்றத்தில் அளித்த மனுவில், வீடியோவில் உள்ள முதியவரைக் கண்டுபிடிப்பதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்ட நிலையில் பதிவில் உள்ள நபரை பற்றிய தகவல் ஏதும் கண்டறிய இயலவில்லை. மேலும் கிடைக்கப்பெற்ற வீடியோ பதிவு 2019-ம் ஆண்டில் பதிவாகி உள்ளது. சைபர் க்ரைம் நிபுணர்களை வைத்து சோதனை செய்தபோது 6 ஆண்டுகள் கடந்து விட்டதால் அடிப்படை பதிவு இல்லை என தெரிவிக்கப்பட்டது.
புகாரில் சொல்லப்பட்ட சந்தேக நபர்கள் இதற்கு முன்பு ஏதேனும் வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளார்களா என சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அவ்வாறு இல்லை என தெரியவருவதால், இந்த வழக்கை முன்னெடுத்து செல்ல முகாந்திரம் இல்லாததால் வழக்கை கைவிடுவதாக 18.02.2026 அன்று நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இதனால், கோபம் அடைந்த நீதிபதி வழக்கை கைவிட முடியாது என தெரிவித்தார். மீண்டும் போலீஸார் விசாரணை நடத்தியபோதுதான் வீரமணி மற்றும் அவரால் பாதிக்கப்பட்ட சிறுமிகள், வீரமணியை மிரட்டி பணம் பறித்த கும்பல், சிறுமிகளை வேட்டையாடிய தொழில் அதிபர்கள் குறித்த தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. இந்த வழக்கு தொடர்பான அனைத்து விவரங்கள் அடங்கிய அறிக்கையை முதல்வர் விஜய்யிடம் தனிப்படை போலீஸார் விரைவில் சமர்ப்பிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தப் பின்னணியில்தான் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஜெம் கிரானைட்ஸ் அலுவலகத்திலும், ஆர்.கே.சாலையில் உள்ள வீரமணி வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
இதனிடையே, ‘ஜெம்’ கிரானைட் வீரமணி மற்றும் அவரது மகனால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி வீரமணியின் உதவியாளர் சாந்தி வீடியோ வெளியிட்டு போலீஸில் பரபரப்பு புகார் கூறியுள்ளதும் கவனிக்கத்தக்கது.