

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் 101-வது பிறந்தநாள் கொண்டாட்டத்துடன் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா டிச.26-ல் நடைபெற உள்ளதாக கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: உத்தரப் பிரதேசம் கான்பூரில், கடந்த 1925-ம் ஆண்டு டிச.26-ம் தேதி நடைபெற்ற மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டது. சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் தலைமை தாங்கி உரையாற்றினார். கட்சி தொடங்கப் பட்டது முதல், நாட்டின் விடுதலைக்காகவும் உழைக்கும் மக்கள் உரிமைகளுக்காகவும், சோசலிச சமூக அமைப்பை உருவாக்க போராடி வருகிறது.
இவ்வாறு அளப்பரிய தியாகங்களை செய்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா டிச.26-ம் தேதி தி.நகர் பாலன் இல்லத்தில் நடைபெற உள்ளது. விழாவில் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் 101-வது பிறந்தநாள் கொண்டாட்டமும் இணைந்து நடத்தப்படும். இதில், சென்னை, காஞ்சி, செங்கை, திருவள்ளூரைச் சேர்ந்த 75 வயதைக் கடந்த முதுபெரும் தலைவர்கள் கவுரவிக்கப்பட உள்ளனர்.
மேலும், கட்சியை தமிழகத்தில் தோற்றுவிப்பதில் முக்கியப் பங்கு வகித்த அமீர் ஹைதர் கானின் 36-வது நினைவுநாள், கே.டி.கே.தங்கமணி 24-வது நினைவேந்தல் நிகழ்வும், செந்தொண்டர் அணிவகுப்பும் நடைபெற உள்ளது.