

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா நாளை நடைபெறுகிறது. இதில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று தலைமை உரையாற்றுகிறார்.
இதுதொடர்பாக, கட்சியின் மாநில செயற்குழு வெளியிட்ட அறிக்கை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1925-ம் ஆண்டு டிச.26-ம் தேதி, கான்பூரில் நடைபெற்ற மாநாட்டில் நிறுவப்பட்டது.
சிந்தனை சிற்பி சிங்காரவேலர் தலைமை தாங்கி உரையாற்றினார். இந்தியாவில் வர்க்கங்களற்ற, மதச்சார்பற்ற, சாதிகளற்ற, சுரண்டலற்ற சோஷலிச சமூகத்தை படைப்பது தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நோக்கம்.
அதற்கேற்ப, கட்சி தொடங்கப்பட்டது முதல் விடுதலைக்காக போராடிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மொழி, பண்பாடு மற்றும் உரிமைகளை பாதுகாக்கவும், சாதிய கொடுமைகளை ஒழிக்கவும் ஏராளமான போராட்டங்களை நடத்தியுள்ளது.
தொடர்ந்து, ஜனநாயகம், மதச்சார்பின்மை, மாநில உரிமைகள், கூட்டாட்சி கோட்பாடு போன்றவற்றை பாதுகாக்க போராடி வருகிறது. இவ்வாறு அளப்பரிய தியாகங்களை செய்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா, சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நாளை (1-ம் தேதி) மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தலைமையில் நடைபெறும் விழாவில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றுகிறார். இவர்களுடன், திமுக கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்று வாழ்த்துரை வழங்கவுள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.