

சென்னை: வெளிநாட்டில் அதிக சம்பளம் என கூறி இளைஞர்களை ஏமாற்றி, அவர்களைக் கடத்திச் சென்று சட்டவிரோதப் பணிகளில் ஈடுபடுத்தும் “சைபர் அடிமைத்தனம்” குறித்து மத்திய புலனாய்வு அமைப்பு(சிபிஐ) கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சிபிஐயின் எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: சைபர் குற்றவாளிகள் சமூக வலைதளங்கள் மற்றும் போலியான ஏஜென்சிகள் மூலம் வெளிநாட்டில் அதிக சம்பளத்தில் வேலை வாய்ப்புகள் இருப்பதாக கவர்ச்சிகரமான விளம்பரம் செய்கின்றனர்.
இதனை நம்பிச் செல்லும் இளைஞர்களின் பாஸ்போர்ட் மற்றும் முக்கிய ஆவணங்களை, அவர்கள் அங்கு சென்றடைந்தவுடன் பறிமுதல் செய்துகொள்கின்றனர்.
பின்னர் அவர்களை ஓரிடத்தில் சிறைவைத்து, மிரட்டல் மற்றும் வன்முறை மூலம் சட்டவிரோத ஆன்லைன் மோசடிகளில் ஈடுபடக் கட்டாயப்படுத்துகின்றனர். இதுவே ‘சைபர் அடிமைத்தனம்’ என்று அழைக்கப்படுகிறது.
எனவே, வெளிநாட்டு வேலை வாய்ப்பு வரும்போது, அந்த நிறுவனம் மற்றும் வேலைக்குச் சேர்க்கும் ஏஜென்ட் பற்றிய முழுமையான விவரங்களை இளைஞர்கள் சரிபார்க்க வேண்டும்.
முறையான சரிபார்ப்பு இன்றி எந்தவொரு ஏஜென்ட்டுக்கும் பணம் கொடுக்கவோ அல்லது அசல் ஆவணங்களை வழங்கவோ வேண்டாம். மிகக் குறைந்த வேலையில் அதிக சம்பளம் என்ற ஆசை வார்த்தைகளைக் கண்டு இளைஞர்கள் ஏமாற வேண்டாம்.
நீங்கள் அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாராவது இது போன்ற மோசடியில் சிக்கியிருந்தால் அல்லது சந்தேகத்துக்குரிய நடவடிக்கைகள் தெரிந்தால் உடனடியாகக் சைபர் க்ரைம் உதவி எண் 1930 மற்றும் www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.