

சென்னை: டிஜிட்டல் கைது மோசடி வலையில் சிக்க வேண்டாம் என்று பொது மக்களுக்கு சிபிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக ‘எக்ஸ்’ வலைதளத்தில் சிபிஐ கூறியிருப்பதாவது: சைபர் குற்றவாளிகள் தங்களை சிபிஐ, காவல்துறை, அமலாக்கத்துறை, இந்திய ரிசர்வ் வங்கி போன்ற உயர் அரசு அமைப்புகளின் அதிகாரிகள் எனக் கூறிக்கொண்டு தொடர்பு கொள்கின்றனர்.
‘டிஜிட்டல் கைது’ செய்யப்பட்டுள்ளதாகக் கூறி மிரட்டி பெருந்தொகையைப் பறிக்க முயல்கின்றனர். இத்தகைய மோசடி வலையில் பொதுமக்கள் யாரும் சிக்க வேண்டாம்.
எந்தவொரு அரசு அமைப்பும் இணைய வழியாகவோ அல்லது வீடியோ அழைப்பு மூலமாகவோ யாரையும் கைது செய்வதில்லை.
எனவே, பொதுமக்கள், இதுபோன்ற மிரட்டல் அல்லது போலி அழைப்புகள் வந்தால், உடனடியாக இணைப்பைத் துண்டிக்க வேண்டும்.
உங்களின் தனிப்பட்ட ஆவணங்கள், வங்கிக் கணக்கு விவரம் அல்லது ஓடிபி எண்களை யாரிடமும் ஒருபோதும் பகிர வேண்டாம்.
இதுபோன்ற இணையவழி மோசடி மிரட்டல்களை எதிர்கொண்டாலோ அல்லது பாதிக்கப்பட்டாலோ உடனடியாக 1930 என்ற சைபர் குற்ற எண்ணிலும், www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலும் புகார் அளிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.