

சென்னை: கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தில் மார்ச் 15-ல் விஜய், 17-ல் செந்தில் பாலாஜி டெல்லி அலுவலகத்தில் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது.
கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக கரூர் ஆட்சியர், மாவட்ட எஸ்.பி. மற்றும் தவெக நிர்வாகிகள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரிடம் சிபிஐ ஏற்கெனவே விரிவான விசாரணை நடத்தியது.
தவெக தலைவர் விஜய்யிடம் கடந்த ஜனவரி 12 மற்றும் 19 ஆகிய தேதிகளில் டெல்லி அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில், மார்ச் 10-ம் தேதி மீண்டும் டெல்லி அலுவலகத்தில் ஆஜராகுமாறு விஜய்க்கு கடந்த வாரம் சிபிஐ சம்மன் அனுப்பியது. ஆனால், 15 நாட்கள் அவகாசம் கோரி விஜய் தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டது. எனினும் சிபிஐ, மார்ச் 15-ம் தேதி டெல்லியில் ஆஜராக புதிய சம்மனை அனுப்பியுள்ளது.
இதுகுறித்து தவெக இணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் கூறுகையில், "கட்சிப் பணிகள் காரணமாகவும், விசாரணையை சென்னைக்கு மாற்றக் கோரியும், மற்றொரு தேதியில் விசாரணைக்கு ஆஜராக அனுமதி கேட்டு நாங்கள் விண்ணப்பித்திருந்தோம். ஆனால், 15-ம் தேதி டெல்லியில் ஆஜராக சிபிஐ அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து ஆலோசித்து விரைவில் முடிவு அறிவிக்கப்படும்" என்றார்.
இதே விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. முதலில் தனக்கு எந்த சம்மனும் வரவில்லை என்று மறுத்த செந்தில் பாலாஜி, நேற்று தனது 'எக்ஸ்' தள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளார். அதில், "கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக மார்ச் 17-ம் தேதி நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. அதன் அடிப்படையில் நேரில் சென்று உரிய விளக்கங்களை அளிக்கவுள்ளேன்" என பதிவிட்டுள்ளார்.