

புதுடெல்லி/சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், 10 பேருக்கு நேரடித் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ நிலை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, புதிதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
தமிழ்நாடு காவல்துறையிடம் இருந்த அனைத்து ஆவணங்களும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.சம்பவம் நடந்த இடத்தில் ஆய்வு செய்ததுடன், ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்தினர் மற்றும் நேரில் பார்த்த சாட்சிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட 30 பேரில் 26 பேரடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டதில், அருள், பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, மணிவண்ணன், சிவா, விஜய், கோகுல், சந்தோஷ் ஆகிய 10 பேர் நேரடியாகக் கொலையில் ஈடுபட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
மற்றவர்கள் ஆயுதங்கள் மற்றும் நாட்டு வெடிகுண்டுகள் வழங்குதல், பண உதவி செய்தல், வாகனங்களை ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டிருக்கலாம்.
வழக்கில் தொடர்புடைய செந்தில், மொட்டை கிருஷ்ணன் ஆகியோர் இங்கிலாந்து மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளதால், அவர்களது வங்கிப் பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
குற்றம்சாட்டப்பட்ட நாகேந்திரன் உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், திருவேங்கடம் காவல்துறை என்கவுண்டரில் கொல்லப்பட்டுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ஒரு மாதத்துக்கு முன்பு முக்கியக் குற்றவாளிகளான அருள் மற்றும் திருவேங்கடத்தை அஸ்வத்தாமன் சந்தித்துப் பேசியது தொடர்பாகவும், அவர்களது தொலைபேசி உரையாடல்கள் மற்றும் வங்கிப் பரிவர்த்தனைகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
குற்றம் சாட்டப்பட்ட நபர்களின் கைபேசி உரையாடல், வாட்ஸ் அப் தகவல், இணையத் தரவுகள், டிஜிட்டல் சிம் தரவு விவரங்கள், கைப்பற்றப்பட்ட 50 அலைபேசி எண்களின் தரவுகள், வங்கிக் கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தும் நோக்கில் அறிவியல்பூர்வமாகவும் பாரபட்சமின்றியும் விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலை அறிக்கையை ஏற்றுக்கொண்டு விசாரணையைத் தொடர்ந்து நடத்தவும், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அனுமதிக்கவும் உச்ச நீதிமன்றத்திடம் சிபிஐ கோரிக்கை விடுத்துள்ளது.